தகுதி நீக்கத்திற்கு பிறகு முதல் முறையாக வயநாட்டில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்!!
கேரளா மாநிலம் வயநாடு பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாராளுமன்றத்திலும் இந்த விவகாரத்தை எழுப்பினர். ராகுல் காந்திக்கு ஆதரவாக எதிர்க்கட்சி தலைவர்கள் குரல் கொடுத்தனர். இந்நிலையில், தகுதி நீக்கத்திற்கு பிறகு முதல் முறையாக ராகுல் காந்தி இன்று வயநாடு தொகுதிக்கு வந்தார்.
அவருக்கு காங்கிரசார் உற்சாக வரவேற்பு அளித்தனர். வயநாட்டில் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் அணிவகுத்து வர ராகுல் காந்தி சாலைப் பேரணி நடத்தினார். திறந்த வாகனத்தில் நின்றபடி பயணித்த ராகுல் காந்தி, சாலையின் இருபுறமும் கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தபடி சென்றார். ராகுல் காந்தியுடன் அவரது சகோதரியும் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடனிருந்தார். வாகனத்தின் முகப்பில் வாய்மையே வெல்லும் என எழுதப்பட்டிருந்தது. பேரணியின் முடிவில் பொதுக்கூட்டத்தில் ராகுல் உரையாற்றுகிறார்.