திருப்பதி கோவிலில் பாஷ்யங்கார் உற்சவம் 16-ந்தேதி தொடக்கம்!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூலவரை தவிர வைணவ ஆச்சாரியார்களுக்கோ அல்லது ஆழ்வார்களுக்கோ தனிச் சன்னதி கிடையாது. பத்மாவதி தாயார் கோவில் கூட, கீழே திருச்சானூரில் உள்ளது. வராகசாமி, ஸ்ரீவாரி புஷ்கரணிக்கு அருகில் தான் உள்ளார். ஆனால், அதற்கு ஒரே ஒரு விதி விலக்கு வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் மட்டுமே. அவரை வடமாநிலங்களில் ‘பாஷ்யங்கார்’ என்று அழைக்கின்றனர். மேலும் ‘விஷிஷ்டா தைவத்யா சித்தபரம் மீமாம்சா’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை புத்தகத்தின் பெயரை ‘ஸ்ரீபாஷ்யம்’ என மாற்றியதால் பகவத் ராமானுஜரை ‘பாஷ்யங்கார்’ என்று வைணவர்கள் அழைத்து வந்தனர். பாஷ்யங்கார் எனப்படும் ராமானுஜர் ஹோலி வைசாக மாதத்தில் ஆருத்ரா நட்சத்திரத்தில் பிறந்தார். ராமானுஜர் திருமலைக்கு வந்து காடு திருத்தி, வீதி அமைத்து திருவிழாக்களை நடத்த ஏற்பாடு செய்தார். அதில் இருந்து தான் திருமலை நகரம் தோன்றியது.
இன்னும் திருமலையில் ராமானுஜர் வீதி உள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் பெரிய கோவிலின் நடைமுறைகளை திருமலைக்கும் கொண்டு வந்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருவாய்மொழி பாட ஏற்பாடு செய்தார். இதுதவிர பல்வேறு திருப்பணிகளை செய்தார். ஆகையால் தான் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ராமானுஜரை போற்றி வருகிறது. அவரை போற்றி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடத்தப்படும் பாஷ்யங்கார் உற்சவம் வருகிற 16-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (மே) 5-ந்தேதி வரை நடக்கிறது. விழாவில் 19 நாட்களுக்கு உபய சமர்ப்பணம் நடக்கிறது. ராமானுஜர் பிறந்த வைசாக மாதத்தில் வரும் ஆருத்ரா நட்சத்திரத்தையொட்டி பாஷ்யகார் சாத்துமுறை வருகிற 25-ந்தேதி நடக்கிறது.
பாஷ்யங்கார் சாத்துமுறையையொட்டி மாலை சஹஸ்ர தீபலங்கார சேவைக்கு பிறகு தங்கத் திருச்சி வாகனத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமியும், மற்றொரு தங்கத் திருச்சி வாகனத்தில் உற்சவர் பாஷ்யகாரும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். அதன் பிறகு கோவிலின் உள் விமானப் பிரகாரத்தை வலம் வருகிறார்கள். அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பாஷ்யங்கார் சன்னதியில் சாத்துமுறை உற்சவம் நடக்கிறது. அதில் ஜீயர் சுவாமிகள், வேத பண்டிதர்கள், அர்ச்சகர்கள் பலர் பங்கேற்கின்றனர்.