மக்கள் நல பணியாளர்களுக்கு பணப்பலன்கள் வேண்டும்- மாநில தலைவர் செல்ல பாண்டியன் கருத்து!!
மக்கள் நல பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. இதுதொடர்பாக மக்கள் நல பணியாளர்கள் சங்க மாநில தலைவர் செல்ல பாண்டியன் கூறியதாவது:- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு ஒருபக்கம் சந்தோஷத்தை தந்தாலும் இன்னொரு பக்கம் வருத்தமும் உள்ளது. மக்கள் நல பணியாளர்கள் பணி வழங்கப்பட்டு 12 வருடம் வேலை பார்த்து விட்டு 20 வருடம் வேலை இல்லாமல் வீட்டில் இருந்து இருக்கிறோம். தி.மு.க. அரசால் வழங்கப்பட்ட வேலை அ.தி.மு.க. அரசு பணியில் இருந்து நீக்கியது. அதை எதிர்த்து ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை தி.மு.க. அரசு ஏற்று நிறைவேற்றி இருக்க வேண்டும்.
அ.தி.மு.க.வால் தொடரப்பட்ட வழக்கை தி.மு.க. மேல் முறையீடு செய்து இருக்க வேண்டியதில்லை. வறுமை, ஏழ்மை, எதிர்பார்ப்பு காரணமாக எங்களில் சிலர் ரூ.7 ஆயிரத்து 500 சம்பளத்தில் மீண்டும் வேலைக்கு சேர்ந்தோம். இந்த சம்பளத்தில் என்ன செய்ய முடியும். பணப்பலனும், பணி பாதுகாப்பும் சேர்த்து வழங்கப்பட வேண்டும். எந்த நிபந்தனைகளையும் ஏற்கமாட்டோம் என்று எழுதி கொடுத்து விட்டுத்தான் வேலையில் சேர்ந்தோம்.
அந்த வழக்கு இன்னும் மதுரை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. எங்களை பொறுத்தவரை 19.8.2014 அன்று மதுரை ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதுதான். எங்கள் சங்கத்தின் நிர்வாக குழு கூடி அடுத்தகட்டமாக முதல்வர், அமைச்சர்களை சந்திப்பது உள்ளிட்ட அணுகுமுறைகளை தொடர்வது பற்றி ஆலோசிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.