ஐஎம்எப் நிதி குறித்து ஏப்.25இல் விவாதம் !!
சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும், அது ஏப்ரல் 25 முதல் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
அரசியல் கட்சிகள் தமது நாட்டுக்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்று தீர்மானிப்பதற்கான வாய்ப்பு இதன்மூலம் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
இலங்கையின் தற்போதைய பொருதாதர நிலைமை மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக கடந்த (10) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.
இராஜதந்திர பிரதானிகளுடனான இக்கலந்துரையாடலில், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பொருளாதார மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான கட்டமைப்பு ரீதியிலான சீர்திருத்த வேலைத்திட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த வேலைத்திட்டம் நிதி மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு மட்டுப்படுத்தப்படாமல், இலங்கையின் மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கு முக்கியமான நல்லிணக்க செயல்முறை போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.