அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு | சக ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய வங்கி ஊழியர் – 5 பேர் உயிரிழப்பு!!
அமெரிக்காவில் வங்கி ஒன்றில் ஊழியர் ஒருவர் தனது சக ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
அமெரிக்காவின் லூயிஸ்வில்லி நகரின் கிழக்கு முதன்மை சாலையில் ‘ஓல்டு நேஷனல் வங்கி’ கிளை செயல்பட்டு வருகிறது. இதில் கானர் ஸ்டர்ஜன் என்ற 25 வயது இளைஞர் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் வங்கியில் நுழைந்த கானர், அங்கிருந்த ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாக, பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை கானர், தனது சமூக வலைதள பக்கத்தில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தற்போது கானரின் வீடியோ பதிவு நீக்கப்பட்டடதாக இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. மேலும், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட கானர் தன்னைதானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்துள்ளார். துப்பாக்கிக் சுட்டுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.
சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவின் நாஷ்வில் பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவில் கடந்த ஆண்டில் (2022) மட்டும் துப்பாக்கிச்சூடு தொடர்பான வன்முறையில் 44,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.