ஒருமித்த எண்ணம் கொண்ட கட்சிகளுடன் கை கோர்ப்போம்: சோனியா காந்தி!!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ஆங்கில பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- கடந்த மாதங்களில் பிரதமர் மோடியும், அவரது அரசும் இந்திய ஜனநாயகத்தின் 3 தூண்களை (பாராளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை) முறையாக அகற்றி வருவதை நாம் பார்த்து வருகிறோம். சமீபத்திய பாராளுமன்ற நிகழ்வுகளை எடுத்துக்கொள்ளுங்கள். கடந்த அமர்வில் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், சமூக பிரிவினைகள் போன்றவற்றை எழுப்பவிடாமல் எதிர்க்கட்சிகளை தடுக்கவும், பட்ஜெட் மற்றும் அதானி விவகாரத்தையும், பிற முக்கிய பிரச்சினைகளையும் விவாதிக்கவும் விடாமல், மத்திய அரசு மேற்கொண்ட உத்திகளே பாராளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைத்ததைப் பார்த்தோம். எதிர்க்கட்சிகளின் உறுதியான நிலைப்பாட்டினால், நரேந்திர மோடி அரசு இதுவரை இல்லாத வகையில், அவைக்குறிப்பில் இருந்து பேச்சுகளை நீக்கியது, விவாதங்களைத் தடுத்தது, பாராளுமன்ற உறுப்பினர்களைத் தாக்கியது, இறுதியாக ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் பதவியை மின்னல் வேகத்தில் பறித்தது.
இவற்றின் விளைவாக ரூ.45 லட்சம் கோடி அளவிலான மக்கள் பணத்துடனான மத்திய பட்ஜெட்டை விவாதமே இன்றி நிறைவேற்றினர். சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் ஆகியவற்றை நரேந்திர மோடி அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது. எதிர்க்கட்சியினர் மீதுதான் 95 சதவீத வழக்குகள் போடப்பட்டுள்ளன. ஆனால் வழக்குகளுக்கு ஆளாகிறவர்கள், பா.ஜ.க.வில் சேர்ந்து விட்டால் அந்த வழக்குகள் அதிசயமாக காணாமல் போகின்றன. நீதித்துறையை பலவீனப்படுத்த முறையாக முயற்சிகள் செய்வது முக்கிய கட்டத்துக்கு வந்துள்ளது. முன்னாள் நீதிபதிகளை தேசவிரோதிகள் என்று சட்ட மந்திரி சொல்கிறார். அதற்கான விலையை அவர்கள் கொடுக்க வேண்டியது வரும் என்று மிரட்டுகிறார்.
வாய்களை வலுக்கட்டாயமாக அடைப்பதால் இந்தியாவின் பிரச்சினைகளை தீர்த்து விட முடியாது. கோடானு கோடி மக்களின் வாழ்வை பாதிக்கக்கூடிய சட்டப்படியான கேள்விகளுக்குக்கூட பிரதமர் பதில் அளிக்காமல் மவுனம் காக்கிறார். நிதி மந்திரி தனது பட்ஜெட் பேச்சில் வேலையில்லா திண்டாட்டம் பற்றியோ, பணவீக்கம் குறித்தோ குறிப்பிடவில்லை. அவரது மவுனம், கோடானு கோடி மக்கள் தங்கள் அன்றாட அத்தியாவசியப்பொருட்களான பால், காய்கறிகள், முட்டை, சமையல் கியாஸ், சமையல் எண்ணெய் போன்றவற்றை வாங்க முடியாமல் அல்லாடி வருவதற்கு உதவாது.
2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்ட பிரதமர், வசதியாக மவுனமாகி விட்டார். வெறுப்புணர்வு, வன்முறை பெருகி வருவதை பிரதமர் கண்டு கொள்வதில்லை. சீனாவுடனான எல்லைப்பிரச்சினை தொடர்கிறது. ஆனால் சீனாவின் ஊடுருவலை பிரதமர் மறுக்கிறார். இதுபற்றி பாராளுமன்றத்தில் விவாதிக்க விடாமல் அரசு தடுக்கிறது. பிரதமரின் தீவிர முயற்சிகளுக்கு அப்பாலும், இந்திய மக்கள் அமைதியாகிவிட மாட்டார்கள். அவர்கள் வாயை அடைத்து விட முடியாது, அடுத்த சில மாதங்கள் நமது ஜனநாயகத்துக்கு கடுமையான சோதனையான காலம் ஆகும்.
காங்கிரஸ் கட்சி மக்களிடம் நேரடியாக செல்வதற்கான முயற்சிகளை எடுக்கும். அரசியல் சாசனத்தையும், அதன் லட்சியங்களையும் பாதுகாப்பதற்கு இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் செய்தது போல ஒருமித்த எண்ணம் கொண்ட அரசியல் கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி கரம் கோர்க்கும். எங்களுடைய போராட்டம், நாட்டு மக்களின் குரலைப் பாதுகாப்பதற்கானது. எதிர்க்கட்சியாக தனது கடமையை காங்கிரஸ் கட்சி உணர்ந்துள்ளது. அதை நிறைவேற்றுவதற்காக ஒருமித்த எண்ணம் கொண்ட எல்லா கட்சிகளுடன் இணைந்து பாடுபடத் தயார். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.