கர்நாடகா தேர்தலில் களமிறங்கும் 52 புதுமுகங்கள்: முதற்கட்டமாக 189 வேட்பாளர்களை அறிவித்தது பாஜக!!
கர்நாடகாவில் வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பணிகளை மேற்கொண்டுள்ளன. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி 2 கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்து களப்பணியை தொடங்கிய நிலையில், ஆளும் பாஜகவின் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் தற்போதைய எம்எல்ஏக்களில் பலருக்கு வாய்ப்பு கொடுக்காமல், புதுமுகங்களை களமிறக்குவதற்கு கட்சி தலைமை முடிவு செய்ததால் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. கடந்த வார இறுதியில் பாஜக தேர்தல் குழு சந்தித்து வேட்பாளர்களை இறுதி செய்தது. இந்நிலையில், பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் முதற்கட்டமாக 189 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 52 பேர் புதுமுகங்கள், 8 பேர் பெண்கள். பல எம்எல்ஏக்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன. 32 வேட்பாளர்கள் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், 30 பேர் பட்டியல் சமூகத்தையும், 16 பேர் பழங்குடியினர் சமூகத்தையும் சேர்ந்தவர்கள். அமைச்சர் அசோகா தனது சொந்த தொகுதியான பத்மநாபநகர் மற்றும் கனகபுரா ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமாரை எதிர்த்து போட்டியிடுகிறார். முதல்வர் பசவராஜ் பொம்மை தனது பாரம்பரிய தொகுதியான ஷிகான் தொகுதியில் களமிறங்குகிறார்.
கட்சியின் மூத்த தலைவர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா, தந்தையின் பாரம்பரிய தொகுதியான சிகாரிபுரா தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, தனது பாரம்பரிய தொகுதியான சிக்மகளூர் தொகுதியிலும், மாநில அமைச்சர் சோமண்ணா, முன்னாள் முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து வருணா தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். கர்நாடக தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 13ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 20ம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது.