சபரிமலையில் விமான நிலையம் அமைக்க அனுமதி கிடைத்துள்ளது- பினராயி விஜயன் தகவல்!!
கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளது. மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள். சபரிமலை ஐயப்பன் கோவில் வரும் பக்தர்கள் வசதிக்காக இக்கோவில் அமைந்துள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என கேரள அரசு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. இதற்காக நிலம் தேர்வு செய்யும் பணி நடந்து, அதனை பற்றிய விபரங்கள் மத்திய சிவில் விமான போக்குவரத்து துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து மத்திய விமான போக்குவரத்து துறை அதிகாரிகள், சுற்றுச்சூழல் துறையினர் முதல் கட்ட ஆய்வு பணிகள் மேற்கொண்டனர்.
தற்போது சபரிமலையில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசின் அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:- சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைக்க தேவையான அனுமதி கிடைத்துள்ளது. எனவே அங்கு கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளன. விரைவில் இப்பணிகள் தொடங்கும். பத்தினம்திட்டா மாவட்டத்தின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் முறையில் மாநில அரசின் 100 நாள் திட்டத்தின் கீழ் இங்கு புதிய சாலை அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.