;
Athirady Tamil News

பஞ்சாப்பில் ராணுவ முகாமில் துப்பாக்கி சூடு- 4 பேர் பலி!!

0

பஞ்சாப் மாநிலத்தில் பதிண்டா என்ற பகுதியில் ராணுவ முகாம் உள்ளது. அதிநவீன ஆயுதங்களை கையாளும் அந்த முகாமில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அந்த ராணுவ வீரர்கள் வசிப்பதற்காக ராணுவ முகாம் வளாகத்தில் ஆங்காங்கே குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் அந்த ராணுவ முகாமுக்குள் சரமாரியாக துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் ராணுவ வீரர்களும், அவர்களது குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துகிறார்களோ என்ற பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கி சத்தம் கேட்ட சில நிமிடங்களில் பதிலடி கொடுக்கும் அதிரடி படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அந்த ராணுவ முகாம் முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டது. வெளிநபர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. ராணுவ வளாகம் முழுவதையும் சீல் வைத்து தேடுதல் வேட்டை நடத்தினார்கள். உள்ளூர் போலீசார் கூட உள்ளே வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை.

துப்பாக்கி சூடு நடந்த அதிகாரிகள் உணவக பகுதியில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அப்போது குண்டு பாய்ந்து 4 பேர் பலியாகி கிடப்பது தெரியவந்தது. அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்களை சுட்டுக்கொன்றது யார் என்று தெரியவில்லை. ராணுவ உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பிறகு துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை தொடங்கியது. அந்த பகுதியில் இருந்த வீரர்கள் அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். பதிண்டா ராணுவ முகாமுக்குள் துப்பாக்கி சூடு நடத்தியது பயங்கரவாதிகள் அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் துப்பாக்கி சூடு நடத்தியது யார் என்பதில் நீண்ட நேரமாக மர்மம் நீடித்தது. ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த துப்பாக்கி சூடு நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. துப்பாக்கியால் சுட்டவர்கள் 2 பேர் என்று முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அவர்கள் இருவரும் சாதாரண உடையில் இருந்தனர். அவர்கள் ராணுவ வீரர்களா? அல்லது வெளியில் இருந்து ஊடுருவியவர்களா? என்று விசாரணை நடந்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு ராணுவ முகாமில் ஒரு துப்பாக்கியும் குண்டுகளும் மாயமாகி இருந்தன. அது பற்றி விசாரணை நடந்து வந்த நிலையில் துப்பாக்கி சூடு நடந்திருக்கிறது. எனவே ராணுவ வீரர்களில் 2 பேர் தான் துப்பாக்கி சூடு நடத்தி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.