ராணுவம், கடற்படை சுற்றி வளைப்பு; தைவானை ஆதரிக்கும் வௌிநாடுகளுக்கு எச்சரிக்கை: சீனா பகிரங்க அறிவிப்பு!!
தைவான் நாட்டை சீனா ராணுவம் சுற்றி வளைத்திருப்பது, தைவானை ஆதரிக்கும் வௌிநாட்டினருக்கான தீவிர எச்சரிக்கை என சீனா பகிரங்கமாக அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த 1949ம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக தைவான் தனி நாடாக பிரிந்து சென்றாலும், தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் இருநாட்டுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு கரம் நீட்டி வருவதால், சீனா கடும் கொந்தளிப்பில் உள்ளது. இந்நிலையில் சீனாவின் கடும் எதிர்ப்புகளையும் மீறி, கடந்த வாரம் தைவான் அதிபர் சாங் இங் வென், தென்அமெரிக்க நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்றபோது, அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் தலைவர் கெவின் மெக்கர்த்தியை சந்தித்து பேசினார்.
இதனால் ஆத்திரமடைந்துள்ள சீனா, தைவானை அச்சுறுத்தும் வகையில் தைவான் கடற்பரப்பில் சீனா ராணுவம் போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. சீனா ராணுவத்தின் 13 போர் விமானங்கள், 3 போர் கப்பல்களை தங்கள் நாட்டு வான் எல்லையில் பார்த்தாக தைவான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன செய்தி தொடர்பாளர் ஜு பெங்லியன் கூறும்போது, “சீன ராணுவம் தைவானை சுற்றி கூட்டு போர் பயிற்சி, ரோந்து மற்றும் தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளது. இது அமெரிக்கா, தைவானின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு சீனாவின் பதிலடி. சீனாவின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்க இது அவசியமான நடவடிக்கை. இது தைவானை ஆதரிக்கும் வௌிநாடுகளுக்கு சீனா விடும் தீவிர எச்சரிக்கை” என்று தெரிவித்துள்ளார்.