பேட்ட பட நடிகர் நவாசுதீன் சித்திக் ரூ.100 கோடி கேட்டு சகோதரர் மீது வழக்கு !!
இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நவாசுதீன் சித்திக். தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தில் வில்லனாக தோன்றி கலக்கி இருப்பார். விஜய் சேதுபதியின் தந்தையாக தோன்றி திரையில் மிரட்டிய நவாசுதீனை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் அவரது சகோதரர் ஷாமாசுதீன் சித்திக், அவரை சகட்டு மேனிக்கு திட்டி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டார். நவாசுதீனின் குடும்ப வாழ்க்கை, அவரது செயல்பாடுகள் குறித்து அவரது சகோதரர் ஷாமாசுதீன் வெளியிட்ட கருத்துக்கள், நவாசுதீனின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் மனம் உடைந்த நவாசுதீன், அந்த கருத்துக்களை சமூக வலைதளத்தில் இருந்து அகற்றுமாறு சகோதரரிடம் கூறினார். இதில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் தங்களின் கருத்துக்களை பொது வெளியில் பகிர்ந்தனர். இது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியது.
இதையடுத்து நடிகர் நவாசுதீன் சித்திக், தனது சகோதரர் ஷாமாசுதீன் சித்திக் மீது கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில் சமூக வலைதளங்களில் ஷாமாசுதீன் சித்திக் பதிவிட்ட அவதூறு கருத்துக்களால் தனக்கு பெரும் மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், இதற்கு இழப்பீடாக ரூ.100 கோடி நஷ்டஈடு தரவேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த வழக்கு மும்பை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் நவாசுதீன் சித்திக் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் நவாசுதீன் சித்திக் அவரது முன்னாள் மனைவியுடனான பிரச்சினைகளை சுமூகமாக பேசி தீர்க்க முயற்சி நடந்து வருகிறது. எனவே முன்னாள் மனைவி மீது அவதூறு வழக்கு எதுவும் பதிய விரும்பவில்லை, என்றார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, முதலில் சகோதரர்கள் இருவரும் சமூக வலைதளங்களில் மாறிமாறி கருத்து பதிவிடுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண வருகிற மே மாதம் 3-ந் தேதி சகோதரர்கள் இருவரும் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். பிரபல நடிகர் நவாசுதீனும் அவரது சகோதரரும் சமூக வலைதளங்களில் பதிவிட்ட அவதூறு கருத்துக்கள் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.