கர்நாடக சட்டசபை தேர்தலில் 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிவு பிரதிபலிக்குமா?!!
பாராளுமன்ற தேர்தல் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில் அமோக வெற்றி பெற்று பா.ஜனதா 2-வது முறையாக ஆட்சி பீடத்தில் அமர்ந்தது. பிரதமராக நரேந்திர மோடி 2-வது தடவையாக பதவி ஏற்று ஆட்சி நடத்தி வருகிறார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபைக்கான பதவிக்காலம் 2024-ம் ஆண்டு மே மாதம் வரை உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் கர்நாடக சட்டசபை தேர்தலை பாராளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக பார்க்க தொடங்கிவிட்டன. அதாவது கர்நாடக சட்டசபை தேர்தலை அரை இறுதி போட்டியாக கருதுகிறார்கள். இதனால் பா.ஜனதா, கர்நாடக சட்டசபை தேர்தலில் எப்படியாவது தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்று பல வியூகங்களை வகுத்து காய்களை நகர்த்தி வருகிறது. அதுபோல் பல மாநிலங்களில் ஆட்சியை இழந்த காங்கிரஸ், தங்களது செல்வாக்கு உள்ள தென்இந்தியாவின் ஒரே தொகுதியான கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்க கடுமையாக போராடி வருகிறது. மாநில கட்சியான ஜனதாதளம் (எஸ்) கட்சியும் கூட்டணி இல்லாமல் ஆட்சியை பிடிக்க தேர்தல் களத்தில் தேசிய கட்சிகளுடன் மல்லுக்கு நிற்கிறது.
கர்நாடகத்தை பொறுத்தவரை சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் மக்களின் மனநிலை மாறி, மாறி பிரதிபலித்து வந்துள்ளது. சமீப ஆண்டுகளாக சட்டசபை தேர்தலில் ஒரு கட்சிக்கும், பாராளுமன்ற தேர்தலில் மற்றொரு கட்சிக்கும் வாக்காளர்கள் பெருவாரியான ஆதரவை வழங்கி வருவதை காண முடிகிறது. கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 104 தொகுதிகளில் வெற்றிக்கனியை ஈட்டியது. காங்கிரஸ் 80 இடங்களிலும், ஜனதாதளம் (எஸ்) கட்சி 36 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதனால் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. காங்கிரசும், ஜனதாதளம் (எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்த ஆட்சி நடத்தியது. அக்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் அதிருப்தியில் 17 பேர் ராஜினாமா செய்தனர். இதனால் கூட்டணி ஆட்சி கலைந்து, எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது.
இதற்கிடையே சட்டசபை தேர்தல் நடந்த ஒரே ஆண்டில் அதாவது 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கர்நாடக வாக்காளர்கள், பா.ஜனதாவுக்கு அமோக ஆதரவு வழங்கினர். மோடி அலையால் பா.ஜனதா 25 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரு இடத்திலும், ஜனதாதளம் (எஸ்) ஒரு இடத்திலும் வென்றன. சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை சுமலதாவும் வெற்றி பெற்றிருந்தார். இதில் ஒட்டுமொத்தமாக பா.ஜனதாவுக்கு 51.7 சதவீத வாக்குகளும், காங்கிரசுக்கு 32.1 சதவீதமும், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு 9.7 சதவீத வாக்குகளும் கிடைத்தது. இதே நிலை கர்நாடக சட்டசபையில் நீடிக்குமா என்பது வாக்காளர்களின் மனநிலையை பொறுத்தது தான். இருப்பினும் பாராளுமன்ற தேர்தல் முடிவு பிரதிபலித்தால், சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 170 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் எனவும், காங்கிரசுக்கு 36 இடங்களும், ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு 11 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என கூறப்படுகிறது.
ஆனால் சட்டசபை தேர்தலுக்கும், பாராளுமன்ற தேர்தலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மாநில ஆட்சியில் 40 சதவீத கமிஷன், எஸ்.ஐ. தேர்வு முறைகேடு உள்பட பிரச்சினைகள் எழுந்தன. மேலும் தற்போது பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு வழங்கவில்லை. அத்துடன் புதுமுகங்களை களத்தில் இறக்கியுள்ளது. டிக்கெட் கிடைக்காதவர்கள் மாற்று கட்சிக்கு செல்லும் நிலை உள்ளது. இது எல்லாம் நிச்சயம் சட்டசபை தேர்தலில் எதிரொலிக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிவு, தற்போது நடைபெறும் சட்டசபை தேர்தலில் எதிரொலிக்குமா என்பது மே 13-ந்தேதி தெரிந்துவிடும்.