சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 141 தொகுதிகளில் வெற்றி பெறும்: டி.கே.சிவக்குமார்!!
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கனகபுரா தொகுதியில் என்னை எதிர்த்து மந்திரி ஆர்.அசோக் போட்டியிடுவதாக பா.ஜனதா அறிவித்துள்ளது. இதை நான் வரவேற்கிறேன். அவருக்கு நல்லது நடக்கட்டும். அரசியல் என்பது கால்பந்து விளையாட்டு அல்ல, அது சதுரங்க ஆட்டத்தை போன்றது. சதுரங்க விளையாட்டை யார் வேண்டுமானாலும் விளையாடட்டும். அரசியலில் போட்டி இருக்க வேண்டும்.
அரசியலில் போராட்டம் என்பது எனக்கு புதிது அல்ல. 1985-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு எதிராக போட்டியிட்டேன். குமாரசாமிக்கு எதிராகவும் தேர்தல் களம் கண்டுள்ளேன். தற்போதும் போராடுகிறேன். எனது வாழ்க்கை போராட்டத்தால் நிறைந்தது. பத்மநாபநகரில் ஆர்.அசோக்கிற்கு எதிராக நாங்கள் பலவீனமான வேட்பாளரை நிறுத்தவில்லை. அவரது தொகுதியில் ஆர்.அசோக்கிற்கு எதிராக அதிருப்தி அதிகமாக உள்ளது. அங்கு முஸ்லிம் வாக்குகள் அதிகமாக உள்ளன. அதை கருத்தில் கொண்டு நாங்கள் நாயுடு சமூகத்தை சேர்ந்த ரகுநாத் நாயுடுவை வேட்பாளராக நிறுத்தியுள்ளோம்.
அவர் வெற்றி பெறுவது உறுதி. தேர்தலில் காங்கிரஸ் கட்சி 141 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. பா.ஜனதா 65 முதல் 70 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும். அதிருப்தியில் உள்ள பா.ஜனதாவினர் என்னை சந்தித்தது குறித்து விவரங்களை தற்போது வெளியிட மாட்டேன். பா.ஜனதாவில் இருந்து பலர் விலகி வருகிறார்கள். அவர்களை நாங்கள் தொடர்பு கொள்ளவில்லை. இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.