;
Athirady Tamil News

டிக்கெட் கிடைக்காததால் அதிருப்தி: மந்திரி உள்பட 3 பேர் பா.ஜனதாவில் இருந்து விலகல்!!

0

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஆளும் பா.ஜனதாவில் இருந்து மூத்த தலைவர்கள் ஒவ்வொருவராக விலகி வருகிறார்கள். பா.ஜனதாவின் சக்தி வாய்ந்த தலைவர் எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஏற்கனவே விலகிவிட்டார். அவரை தொடர்ந்து நேற்று முன்தினம் இன்னொரு மூத்த தலைவர் ஈசுவரப்பாவும் தேர்தலில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் அவர்கள் பா.ஜனதாவில் நீடிக்கிறார்கள். இந்த நிலையில் ராணிபென்னூர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட டிக்கெட் கிடைக்காததால், அதிருப்தி அடைந்துள்ள சங்கர் எம்.எல்.சி. தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பெங்களூரு விதான சவுதாவில் நேற்று மேல்-சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டியை நேரில் சந்தித்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

ராணிபென்னூர் தொகுதியில் அவர் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். கர்நாடக பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவராக இருப்பவர் லட்சுமண் சவதி எம்.எல்.சி. லிங்காயத் சமூகத்தை சேர்ந்த அவர் எடியூரப்பா மந்திரிசபையில் (2019-21) துணை முதல்-மந்திரியாக பணியாற்றினார். கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய பிறகும் அவருக்கு முக்கிய பதவியை பா.ஜனதா வழங்கியது. எடியூரப்பா கடந்த 2021-ம் ஆண்டு பதவி விலகினார். அதைத்தொடர்ந்து பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவரது மந்திரிசபையில் லட்சுமண் சவதிக்கு இடம் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் சட்டசபை தேர்தலில் அதானி தொகுதியில் தனக்கு போட்டியிட டிக்கெட் வழங்குமாறு லட்சுமண் சவதி கேட்டார்.

ஒருவேளை டிக்கெட் வழங்காவிட்டால், கட்சியில் நீடிக்க மாட்டேன் என்றும் கூறினார். ஆனால் அதானி தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள மகேஷ் குமடள்ளிக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது. அவர் காங்கிரசில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்தவர். ரமேஷ் ஜார்கிகோளியின் நெருங்கிய ஆதரவாளர். அதானியில் தனக்கு டிக்கெட் வழங்காததால் கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய லட்சுமண் சவதி, பா.ஜனதாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து பெலகாவியில் அவர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- நான் பா.ஜனதாவை விட்டு விலக முடிவு செய்துள்ளேன். இது தான் எனது முடிவு.

நான் யாரிடமும் சென்று பிச்சை எடுக்க மாட்டேன். எனக்கு சுயமரியாதை உள்ளது. நான் யாருடைய விருப்பத்தின்படியும் செயல்பட மாட்டேன். அதிகாரம் நிரந்தரம் இல்லை. இந்த பூமியில் பிறந்தவர்கள் நிச்சயம் ஒரு நாள் மரணம் அடைந்தே தீர வேண்டும். அதாவது மரணம் உறுதி. வானத்தை நோக்கி எறியும் கல் மீண்டும் பூமிக்கு வந்தே தீரும். அதே போல் அரசியல் அதிகாரம் யாருக்கும் நிரந்தரம் அல்ல. இதை நான் நன்றாக புரிந்து வைத்துள்ளேன். எல்லாவற்றையும் விட எனது தொகுதி மக்கள் தான் எனக்கு முக்கியம். அதானி தொகுதி மக்களே எனக்கு கட்சி மேலிடம். அவர்களின் கருத்து கேட்டு அடுத்தக்கட்ட முடிவை நாளை (இன்று) மாலை அறிவிப்பேன். எனது எம்.எல்.சி. பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார். லட்சுமண் சவதி முன்பு எடியூரப்பா மந்திரிசபையில் (2008-13) மந்திரியாக பணியாற்றியபோது, சட்டசபை கூட்டத்தில் செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த தலைவரான லட்சுமண் சவதியின் விலகல், வட கர்நாடகத்தில் குறிப்பாக பெலகாவி மாவட்டத்தில் பா.ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அவர் விரைவில் காங்கிரசில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தற்போது மீனவர் நலன் மற்றும் துறைமுகங்கள் துறை மந்திரியாக உள்ள எஸ்.அங்கார், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சுள்ளியா தொகுதியில் அவர் 6 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்த முறை நடைபெறும் தேர்தலில் அதே தொகுதியில் டிக்கெட் எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் அங்கு அவருக்கு டிக்கெட் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள அவர், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அரசியலில் நேர்மைக்கு இடம் இல்லை என்று கூறியுள்ள அவர், இந்த தேர்தலில் பா.ஜனதாவை ஆதரித்து பிரசாரம் செய்ய மாட்டார் என்று சொல்லப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.