ஆட்டோவில் எடுத்துச் சென்ற ரூ.1 கோடி பறிமுதல் – கர்நாடகாவில் பரபரப்பு!!
மொத்தம் 224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம் 10-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. தினமும் காலை 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது. ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதி இல்லை. வேட்பாளர்களுக்கு முன்கூட்டியே நேரத்தை ஒதுக்க தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வரும் 20-ம் தேதி கடைசி நாள் ஆகும். 21-ம் தேதி மனுக்கள் பரிசீலனை நடைபெற உள்ளது. 24-ம் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும்.
வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்கள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்கிடையே, பா.ஜ.க. 189 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் 166 தொகுதிகளுக்கும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 93 தொகுதிகளுக்கும் ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இந்நிலையில், பெங்களூருவில் ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட ஒரு கோடி ரூபாய் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். உடனடியாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற பணம் குறித்து 2 பேரிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர். விசாரணையில், தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பணம் என தெரிய வந்துள்ளது. அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆட்டோவில் இருந்து 1 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.