இஸ்ரேலில் மேலும் 2 பாலஸ்தீனர்கள் சுட்டுக்கொலை!!
இஸ்ரேலில் மேலும் 2 பாலஸ்தீனர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது. மேற்கு கரை பகுதியில் தங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக 2 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் சுட்டு கொன்றது. ஏற்கனவே அங்கு இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே நிலவி வரும் பதற்றம் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு கரையின் நாப்லுஸ் நகரில் அமைந்துள்ள எலான் மோரே யூதக் குடியிருப்பு பகுதிக்கு துப்பாக்கியுடன் 3 பாலஸ்தீனர்கள் நேற்று முன்தினம் வந்தனர். அவர்களில் இருவரை அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். காரில் தப்பியோடிய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டவர்கள் மேற்கு கரையின் டெயிர் அல்-ஹதாப் கிராமத்தை சேர்ந்த அப்துல்லா சவூத், முகமது அபு தீரா என்று பாலஸ்தீன சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் அமைந்துள்ள தற்போதைய அரசு, அந்த நாட்டின் வரலாற்றிலேயே மிக தீவிரமான வலதுசாரி அரசு என்று அது கூறப்படுகிறது. புதிய அரசு அமைந்ததில் இருந்து பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேல் அரசு மிக கடுமையாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. தங்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை வேட்டையாடுவதாக கூறி, மேற்கு கரை பகுதிகளில் இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்துவதும், பதிலடியாக இஸ்ரேலியர்கள் மீது பாலஸ்தீனர்கள் தாக்குதல் நடத்துவதும் இந்தாண்டு தொடக்கத்திலிருந்து அதிகரித்து வருகிறது.
இந்தாண்டில் மட்டும் இஸ்ரேல் படையினர் தாக்கி சுமார் 90 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று இஸ்ரேல் அரசு கூறினாலும், கற்களை வீசி எதிர்ப்பை தெரிவித்த சாதாரண இளைஞர்கள் கூட இஸ்ரேல் படையினரால் சுட்டு கொல்லப்படுவதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக பாலஸ்தீனர்கள் நடத்திய தாக்குதல்களில் 17க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், ஜெருசலேமில் யூதர்கள், முஸ்லிம்கள் ஆகிய இரு பிரிவினருமே உரிமை கொண்டாடி வரும் அல்-அக்ஸா மசூதியில் தொழுகை நடத்தி கொண்டிருந்த பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் போலீசார் கடந்த வாரம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இது, அந்த பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்தது. இந்த சூழலில், துப்பாக்கிச்சூடு நடத்த வந்ததாக இரு பாலஸ்தீனர்களை இஸ்ரேல் படையினர் தற்போது சுட்டு கொன்றுள்ளனர்.