திருவனந்தபுரத்தில் இருந்து கண்ணூர் வரையிலான முதல் வந்தே பாரத் ரெயில் சேவை: 25-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!!
நாடு முழுவதும் அதிவேக வந்தே பாரத் ரெயில் சேவைகளை ரெயில்வே துறை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் இருந்து கண்ணூர் வரை வந்தே பாரத் ரெயில் விடப்படுகிறது. இந்த ரெயில் சேவை வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. இதனை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். சென்னை-கோவை இடையே 8 பெட்டிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் சேவையை போலவே திருவனந்தபுரம்- கண்ணூர் இடையேயும் 8 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில் ஓடும். இதில் சேர்கார் டிக்கெட் ரூ.1354, எக்சிகியூட்டிவ் கோச்சுக்கான கட்டணம் ரூ.2238-ஆகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்-கண்ணூர் இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையின் சோதனை ஓட்டம் விரைவில் நடக்க இருக்கிறது. இதற்கான பெட்டிகள் சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் இருந்து கேரளாவுக்கு இன்று கொண்டு செல்லப்படுகிறது. கேரளா சென்றடைந்ததும் அங்கு இப்பெட்டிகள் பரிசோதனை செய்யப்படும். பின்னர் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கேரளாவில் உள்ள பெரும்பாலான ரெயில் பாதைகள் அதிக வளைவுகளுடன் காணப்படுகிறது. இதனால் அதிவேக ரெயில்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே இந்த ரெயில் பாதைகளை நேர் பாதைகளாக ஆக்க ரெயில்வே துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். இப்பாதைகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டால் இங்கு ஓடும் பெரும்பாலான ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.