அவதூறு வழக்கில் குற்றத்தீர்ப்புக்கு தடை கோரும் ராகுல் காந்தி மனு மீது 20-ந்தேதி தீர்ப்பு!!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி (வயது 52), கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலத் தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர், “நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்களின் பெயர்களுக்குப் பின்னேயும் மோடி என வந்தது எப்படி?” என பேசியதாக தகவல்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ராகுல் மீது குஜராத்தில், சூரத் மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், அந்த மாநில முன்னாள் மந்திரியும், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுமான புர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ராகுல் குற்றவாளி என தீர்மானித்து அவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, கடந்த மாதம் 23-ந்தேதி மாஜிஸ்திரேட்டு எச்.எச்.வர்மா பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
மேலும், மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக தண்டனையை 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்ததுடன், ராகுலுக்கு ஜாமீன் வழங்கியும் அவர் உத்தரவிட்டார். இந்த தண்டனையைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில், ராகுல் எம்.பி. பதவி, அரசியல் சட்டம் பிரிவு 102 (1) (ஈ) உடன் இணைந்த 1951-ம்ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8 -ன்படி பறிக்கப்பட்டது. இந்த நிலையில் சூரத் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக கடந்த 3-ந் தேதி சூரத் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகி மேல்முறையீடு செய்தார். அங்கு அவரது ஜாமீனை நீட்டித்தும், 2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்தும் நீதிபதி ஆர்.பி. மோகேரா உத்தரவிட்டார். மேலும் ராகுல் மீதான குற்றத்தீர்ப்புக்கு தடை விதிக்கக்கோரும் மனு மீது 13-ந் தேதி விசாரணை நடத்தப்படும் எனவும் அறிவித்தார். அந்த விசாரணை, சூரத் மாவட்ட கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி ஆர்.பி. மோகேரா முன்னிலையில் நேற்று நடந்தது.
ராகுல் தரப்பில் மூத்த வக்கீல் ஆர்.எஸ்.சீமா ஆஜராகி வாதாடினார். அவர் கூறியதாவது:- விசாரணை கோர்ட்டில், ராகுல் மீதான வழக்கில் விசாரணை நியாயமாக நடைபெறவில்லை. மாஜிஸ்திரேட்டின் தீர்ப்பு விசித்திரமானது ஏனென்றால், விசாரணை கோர்ட்டு நீதிபதி பதிவில் உள்ள அனைத்தையும் தாறுமாறாக ஆதாரமாக எடுத்துக் கொண்டார். அங்கு விசாரணை நியாயமாக நடைபெறவில்லை. மொத்த வழக்குமே மின்னணு ஆதாரம் அடிப்படையிலானது. தேர்தலின்போது பேசிய பேச்சை 100 கி.மீ.க்கு அப்பால் இருந்து ஒருவர் டி.வி. செய்தியில் கேட்டு வழக்கு போட்டுள்ளார். இந்த வழக்கில் அதிகபட்ச தண்டனை தேவை இல்லை. சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது, இந்த வழக்கில் வழக்குதாரரால் தவறாக இணைக்கப்பட்டுள்ளது. எனவே ராகுல் மீதான குற்றத்தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார். ராகுல் மீது வழக்கு போட்ட புர்னேஷ் மோடி தரப்பில் வக்கீல் ஹர்சித் டோலியா ஆஜராகி வாதாடினார். அவர் கூறியதாவது:- ராகுல் தனது பேச்சின்மூலமாக பெயரின் பின்பகுதியில் மோடி என வருகிற அனைவரையும் இழிவுபடுத்த முயற்சித்ததால்தான் இந்த வழக்குதாரர் கோபம் அடைந்தார். இந்தப் பேச்சை அவர் பேசியபோது, அவர் நாட்டின் இரண்டாவது பெரிய கட்சியின் (காங்கிரஸ்) தலைவராக இருந்தார். அவரது பேச்சு நாட்டு மக்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் அவர் தனது பேச்சை பரபரப்பாக்கவும் முயற்சித்தார். அந்தப் பேச்சில் ராகுல், பிரதமர் நரேந்திர மோடி பற்றி பேசினார். ஆனால் அவர் அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல், அதைத் தாண்டிச் சென்றார்.
எல்லா திருடர்களும் பெயரின் பின்னால் ஏன் மோடி என வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என கேட்டார். அந்தப் பேச்சின் இந்தப் பகுதிதான் வழக்குதாரரை புண்படுத்திவிட்டது. எனவேதான் இந்த வழக்கு. தனது பேச்சுக்காக ராகுல் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். இதே போன்று அவர் பல அவதூறு வழக்குகளை சந்தித்து வருகிறார். ரபேல் வழக்கில் ராகுல். சுப்ரீம் கோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டும், தொடர்ந்து அவதூறாகப் பேசுகிறார். இவ்வாறு அவர் வாதாடினார். சம்பவ இடம் ஒன்று, வழக்கு போட்ட இடம் ஒன்று என்று ராகுல் காந்தியின் வக்கீல் சுட்டிக்காட்டியதற்கு, புர்னேஷ் மோடியின் வக்கீல் பதில் அளிக்கையில், “வழக்கு விசாரணையின் போது இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், இப்போது பிரச்சினை செய்கிறார்கள்” என குறிப்பிட்டார்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஆர்.பி. மோகேரா, இந்த மனு மீதான தீர்ப்பை 20-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். எனவே அந்த நாளில், ராகுல் மீதான குற்றத்தீர்ப்புக்கு தடை வருமா என தெரிய வரும். அப்படி தடை விதிக்கப்பட்டால், ராகுல் காந்தியின் எம்.பி. பதவி ரத்தும் நிறுத்தப்படும், அவர் மீண்டும் நாடாளுமன்றம் செல்ல வழி பிறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.