;
Athirady Tamil News

அதிர வைக்கும் பட்டியல்: கோடீசுவர முதல்-மந்திரிகள் பட்டியலில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல் இடம்!!

0

நமது நாட்டில் ஏ.டி.ஆர். என்று அழைக்கப்படுகிற ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு நமது நாட்டின் அரசியல்வாதிகள், தேர்தல்கள், வேட்பாளர்கள் பற்றிய புள்ளி விவரங்களை பொதுவெளியில் தருவதில் நிபுணத்துவம் பெற்று விளங்குகிறது. இந்த அமைப்பு, நமது நாட்டில் உள்ள 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதல்-மந்திரிகளின் சொத்து விவரங்களை வெளியிட்டு மக்களை அதிர வைத்துள்ளது. நமது நாட்டிலேயே பணக்கார முதல்-மந்திரி என்ற பெயரைத் தட்டிச்செல்கிறவர், தென் மாநிலங்ளில் ஒன்றான ஆந்திராவின் முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி. 46 வயதே ஆன இவருக்கு மொத்த சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா? ரூ.510 கோடியே 38 லட்சத்து 16 ஆயிரத்து 566 ஆகும். இவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவார். அவருக்கு அடுத்த நிலையில் 2-வது பணக்கார முதல்-மந்திரி யார் தெரியுமா? வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தின் பெமா காண்டு. பா.ஜ.க.வைச் சேர்ந்த இவரது சொத்து மதிப்பு, ரூ. 163 கோடியே 50 லட்சத்து 58 ஆயிரத்து 142 ஆகும். முதல்-மந்திரிகளில் மூன்றாவது பணக்கார முதல்-மந்திரி ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஆவார்.

பிஜூ ஜனதாதளக் கட்சியின் தலைவரான இவருக்கு ரூ.63 கோடியே 87 லட்சத்து 41 ஆயிரத்து 816 மதிப்பிலான சொத்துகள் இருக்கின்றன. சொத்துகளில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள முதல்-மந்திரிகள் இவர்கள்தான்- 1. ஜெகன் மோகன் ரெட்டி (ஆந்திரா) – ரூ.510.38 கோடி 2. பெமா காண்டு (அருணாசலபிரதேசம்) – ரூ.163.50 கோடி 3. நவீன் பட்நாயக் (ஒடிசா)-ரூ.63.87 கோடி 4. நெய்பியூ ரியோ (நாகலாந்து)-ரூ.46.95 கோடி 5. என். ரங்கசாமி (புதுச்சேரி)-ரூ.38.39 கோடி 6. சந்திரசேகர ராவ் (தெலுங்கானா) -ரூ.23.55 கோடி 7. பூபேஷ் பாகல் (சத்தீஷ்கார்) -ரூ.23.05 கோடி 8. ஹிமாந்த பிஸ்வா சர்மா (அசாம்) – ரூ.17.27 கோடி 9. கான்ராட் சங்மா (மேகாலயா) -ரூ.14.06 கோடி 10. மாணிக் சகா (திரிபுரா) -ரூ.13.90 கோடி நாட்டின் 30 முதல்-மந்திரிகளில் 29 முதல்-மந்திரிகள் கோடீசுவரர்கள். ஒரே ஒருவர்தான், இந்தப் பிரிவில் சேர மாட்டார். அவர் வேறு யாருமல்ல, மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்-மந்திரியான மம்தா பானர்ஜிதான். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரான இவரது சொத்து மதிப்பு ரூ.15 லட்சத்து 38 ஆயிரத்து 29 ஆகும். நமது தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தப் பட்டியலில் 14-வது இடத்தில் உள்ளார். சொத்து மதிப்பு ரூ.8 கோடியே 88 லட்சத்து 75 ஆயிரத்து 339 ஆகும். நாட்டில் இடதுசாரிக்கட்சி ஆளும் ஒரே மாநிலம், கேரளா.

அங்கு முதல்-மந்திரியாக உள்ள பினராயி விஜயன், இந்தப் பட்டியலில் 29-வது இடத்தில் இருக்கிறார். இவருக்கு ரூ.1 கோடியே 18 லட்சத்து 75 ஆயிரத்து 766 ஆகும். பா.ஜ.க.வுக்கு சிம்ம சொப்பமாக டெல்லியில் திகழுகிற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.3 கோடியே 44 லட்சத்து 42 ஆயிரத்து 870 மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. பட்டியலில் இவருக்கு கிடைத்துள்ள இடம், 23. இந்த சொத்துப்பட்டியலை நம்பலாமா என கேட்டு விடாதீர்கள். ஏனென்றால், பட்டியலில் இடம்பெற்றிருக்கிற முதல்-மந்திரிகள் தேர்தலின்போது தாக்கல் செய்த சொத்துப்பட்டியலை ஆய்வு செய்துதான் இந்தப் பட்டியலை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு தயாரித்து இருக்கிறது, எனவே நம்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.