கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையால் பதட்டம்- கிம் ஜாங் உன் எச்சரிக்கை!!
வடகொரிய நாட்டின் அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன் அவ்வப்போது ஏவுகணை சோதனை, அணு ஆயத சோதனை போன்றவற்றை நடத்தி தனது நாட்டின் ஆயுத பலத்தை காட்டி வருகிறார். குறிப்பாக அமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் வகையில் அவரது நடவடிக்கைகள் இருப்பதால் வடகொரியாவிற்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளும் விதித்துள்ளது. இதனால் அந்த நாடு பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டாலும் கூட அதிபர் கிம் ஜாங் உன் தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளவில்லை. தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் எதிர்ப்பில் உள்ள வடகொரியா அந்த நாடுகளை சீண்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா-தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி நடத்தின. இதனால் ஆவேசம் அடைந்த வடகொரியா தனது ஆயுத சோதனையை தீவிரப்படுத்தியது.
குறிப்பாக அமெரிக்கா-தென்கொரியாவின் ராணுவ பயிற்சி எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த மாத இறுதியில் கடலுக்கு அடியில் ரேடியோ ஆப்டிவ் என்ற செயற்கை சுனாமியை ஏற்படுத்தும் பரிசோதனையை நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் வடகொரியா இன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ஐ.சி.பி.எம்.) சோதனை செய்துள்ளது. இந்த சோதனை போட்டியாளர்களுக்கு தீவிரமான அமைதியின்மை மற்றும் திகிலை ஏற்படுத்தும் என்று அந்த நாடு எச்சரித்துள்ளது. வடகொரியாவின் இந்த சோதனையை அதிபர் கிங் ஜாங் உன் மேற்பார்வையிட்டுள்ளார். இந்த சோதனையின் மூலம் ராணுவ திறன், மூலோ பாய தாக்குதல் திறன் கொண்டது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஜப்பான் கடல் பகுதியை நோக்கி நடத்தப்பட்ட இந்த சோதனை ஜப்பானின் ஹக்கிடோ தீவில் பதட்டத்தை ஏற்படுத்தியது. வடகொரியாவின் ஏவுகணை ஜப்பானின் வடக்கு பகுதியில் ஹோக்கைடோ பகுதியில் விழலாம் என்று ஜப்பான் எச்சரிக்கை விடுத்தது. இதனால் அந்த தீவில் வசிக்கும் லட்சகணக்கான மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடப்பட்டது. எனினும் சிறிது நேரத்தில் அந்த எச்சரிக்கையை ஜப்பான் திரும்ப பெற்றது.