டெல்லி ஐகோர்ட்டில் ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் மேல்முறையீடு வழக்கில் அடுத்த மாதம் விசாரணை!!
மத்தியில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது, ‘2 ஜி’ ஸ்பெக்ட்ரம் (அலை வரிசை) ஒதுக்கீடு செய்ததில் பெரும் ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது, இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முன்னாள் தொலை தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு தொடுத்தன. இந்த வழக்கை விசாரித்த டெல்லி தனிக்கோர்ட்டு அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ந் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கு ஆதாரமற்றது என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் மேல்முறையீடு செய்துள்ளன. இந்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதி தினேஷ் குமார் சர்மா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் விரைவாக வாதிட வசதியாக பட்டியலிட வேண்டும், இந்த மேல்முறையீட்டு மனுக்களை நாள்தோறும் விசாரிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. வக்கீல் நீரஜ் ஜெயின் கேட்டுக்கொண்டார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் அடுத்த மாதம் 22 மற்றும் 23-ந் தேதி விசாரணை நடத்தப்படும் என நீதிபதி தினேஷ் குமார் சர்மா அறிவித்தார். மேலும், இந்த வழக்கில் சி.பி.ஐ., மத்திய அமலாக்கத்துறை, ஆ.ராசா, கனிமொழி மற்றும் தொடர்புடைய அனைவரும் தங்களது எழுத்துப்பூர்வமான வாதங்களை 5 பக்கங்களுக்கு மிகாமல் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தினஷே் குமார் சர்மா உத்தரவிட்டார்.