மப்பேடு அருகே கார் மீது வேன் மோதல்: 3 வாலிபர்கள் பலி!!
அரக்கோணம், கணேச நகர் 12-வது தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் அஸ்வின்(வயது25). இவர் நேற்று இரவு நண்பர்களான அதே பகுதி பாலசுந்தரம் தெருவை சேர்ந்த குபேந்திரன் மகன் பாலாஜி(26), அசோக்நகரை சேர்ந்த செல்வம் மகன் மதன்(26) மற்றும் விஷ்ணு (28), ஹேம்நாத்(29) ஆகியோருடன் காரில் சென்னை நோக்கி வந்தார். இரவு 12.30 மணியளவில் கார் திருவள்ளூர் அருகே உள்ள மப்பேடு அடுத்த இருளஞ்சேரியில் தண்டலம்-அரக்கோணம் சாலையில் வந்து கொண்டு இருந்தது. அப்போது ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணி முடிந்து தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டுவேன் ஒன்று அரக்கோணம் நோக்கி வந்தது. இருளஞ்சேரியில் உள்ள ஒரு வளைவில் திரும்பிய போது அதிவேகமாக வந்த காரும் வேனும் நேருக்கு நேர் மோதியது. இதில் காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. காரில் இருந்த அஸ்வின், பாலாஜி, மதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்கள். விஷ்ணு, ஹேம் நாத் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
இதேபோல் வேனில் பயணம் செய்த அரக்கோணத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 10 பெண்கள் உள்பட 13 பேர் காயம் அடைந்தனர். வேனை ஓட்டிய அரக்கோணம் மேல்பாக்கத்தை சேர்ந்த செல்வகுமாரும் பலத்த காயம் அடைந்தார். தகவல் அறிந்ததும் மப்பேடு போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான அஸ்வின், பாலாஜி, மதன் ஆகியோரின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் அடைந்த விஷ்ணு,ஹேம்நாத் உள்பட 16 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் விஷ்ணு,ஹேம்நாத் ஆகிய 2 பேரின் நிலைமை மோசமாக உள்ளது.
அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது. இரவில் வளைவில் திரும்பியபோது அதி வேகத்தில் கட்டுபாடு இல்லாமல் வந்ததால் வேனும், காரும் மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலியான 3 பேரும் சென்னை புளியந்தோப்பில் பிரபலமான இரவு பிரியாணியை சாப்பிடுவதற்காக காரில் வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அவர்கள் விபத்தில் சிக்கி பலியாகி விட்டனர். பலியானவர்களின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி துடித்தது பரிதாபமாக இருந்தது. இந்த விபத்து குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.