1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு 18-ந்தேதி தொடங்குகிறது!!!
தமிழகத்தில் 11, 12 பொதுத்தேர்வு நடந்து முடிந்து உள்ளன. அதனை தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்வு வருகிற 20-ந் தேதி முடிகிறது. 1 முதல் 9-ம் வகுப்பு தவிர பிற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தி முடியும் நிலையில் ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வருகிற 18-ந் தேதி ஆண்டு இறுதித்தேர்வு தொடங்குகிறது. அரசு, உதவிபெறும் பள்ளிகள் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் 28-ந் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.
காலை 10 மணி முதல் 12.30 மணி வரையிலும் பிற்பகல் 1.30 மணி முதல் 4.30 மணி வரையிலும் வகுப்பு வாரியாக பிரித்து தேர்வு நடத்தப்படுகிறது. தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் இந்த வாரம் ஆண்டு இறுதித்தேர்வு தொடங்கி 20-ந் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளன. அடுத்த வாரம் இறுதியில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்து வருவதால் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு முன் கூட்டியே தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனாலும் திட்டமிட்டப்படி எவ்வித மாற்றமும் இல்லாமல் இறுதித்தேர்வு நடைபெறுகிறது. அரசு பள்ளிகளுக்கு 28-ந்தேதி கடைசி வேலை நாளாகும்.
29-ந்தேதியில் இருந்து கோடை விடுமுறை விடப்படுகிறது. ஒரு மாதம் விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் ஜூன் 1-ந்தேதி திறக்க கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. கோடை வெப்பம் அப்போது அதிகமாக இருக்கும் பட்சத்தில் பள்ளி திறப்பதை தள்ளி வைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு 220 வேலை நாட்கள் இந்த ஆண்டில் பள்ளிகள் நடத்திருப்பது குறிப்பிடத்தக்கது.