;
Athirady Tamil News

பா.ஜனதாவை வீழ்த்த வியூகம்- உத்தவ் தாக்கரேவை சந்திக்க ராகுல் காந்தி திட்டம்!!

0

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிப்பதற்காக நாடு முழுவதும் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான கூட்டணியை அமைக்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 12-ந்தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்தில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ராகுல் காந்தியை நீண்ட நேரம் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அப்போது மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ஒடிசா நவீன் பட்நாயக், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, டெல்லி, பஞ்சாப், அரியானாவில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே பா.ஜனதாவை தோற்கடிக்க முடியும் என நிதிஷ்குமார் கூறியதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அன்று மாலையே நிதிஷ் குமார், ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலையும் சந்தித்தார். தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள கார்கே இல்லத்தில் ராகுல்காந்தியுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்ட பல்வேறு ஆலோசனைகளை சரத்பவார் வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும் மகாராஷ்டிராவில் பா.ஜனதாவை வீழ்த்துவது குறித்தும் சரத்பவார் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

மகாராஷ்டிராவில் 48 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. அங்கு காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் உள்ளன. எனவே தேசிய அளவில் காங்கிரஸ் தனது எண்ணிக்கையை உயர்த்த மகாராஷ்டிராவில் அதிக இடங்களில் போட்டியிட விரும்புகிறது. இது தொடர்பாக சரத்பவாருடன், ராகுல்காந்தி விவாதித்துள்ளார். சமீபத்தில் சாவர்கர் குறித்து ராகுல்காந்தி பேசிய பேச்சு மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேயுடன் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரத்தில் உத்தவ் தாக்கரேயுடன் கருத்து வேறுபாடுகளை களைவதற்கு ராகுல்காந்தி ஒப்புக்கொண்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக விரைவில் ராகுல் காந்தி மும்பை சென்று உத்தவ் தாக்கரையை சந்தித்து பேசுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

அப்போது கூட்டணியில் உள்ள கருத்து வேறுபாடுகளை களையவும், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வியூகத்தை உருவாக்கவும் ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகையில், மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் 15 இடங்கள் கிடைக்கும். மீதமுள்ள 3 இடங்கள் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுக்கு வழங்கப்படும். ஆனால் சிவசேனா அதிக இடங்களை கேட்டு வருகிறது. அதே நேரம் சிவசேனாவில் 13 சிட்டிங் எம்.பி.க்கள், தற்போதைய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்துள்ளனர். எனவே வலுவான வேட்பாளர்களை பெறுவதில் உத்தவ் தாக்கரே சிரமங்களை சந்திக்க நேரிடும். நாங்கள் வேட்பாளர்களை மாற்றி கொள்ளலாம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.