பெண்களுக்கு அதிகாரமளித்தல் இந்தியாவுக்கு உலக வங்கி தலைவர் பாராட்டு!!
பெண்களுக்கு அதிகாரமளித்து வரும் நடவடிக்கைகளுக்காக இந்தியாவுக்கு உலக வங்கி தலைவர் மல்பாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டனில் நடக்கும் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்தில் பங்கேற்க ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்கு சென்றுள்ளார். இந்த கூட்டத்தின் ஒருபகுதியாக, தொழில்முனைவோர் மற்றும் தலைவர்களாக பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்ற தலைப்பில் கருத்தரங்குக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் உலக வங்கி தலைவர் டேவிட் மல்பாஸ், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அப்போது இந்தியா மற்றும் உலக நாடுகளில் பெண்களின் முன்னேற்றம் மற்றும் அதிகாரமளித்தல் பற்றிய கேள்விக்கு பதிலளித்து பேசிய நிர்மலா சீதாராமன், “பெண்களுக்கு பொருளாதார அதிகாரம் அளிக்க மோடி அரசு தற்போது மேற்கொண்டு வரும் செயல் திட்டங்கள் தொடரும்,’’ என்று கூறினார். இதனை கேட்ட உலக வங்கி தலைவர் மல்பாஸ், இந்தியாவில் பெண்களுக்கு அதிகாரமளிக்க மோடி அரசு எடுத்து வரும் முயற்சிகளை பாராட்டினார். மேலும் இது குறித்த விவகாரங்களில் இந்திய பிரதமர் மோடி மிகுந்த அக்கறை, ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.