நல்லூரில் உண்ணாவிரத போராட்டம் ஆரம்பம்!! (PHOTOS)
“தமிழர் எம் மரபுரிமைகள் பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் அடையாள உண்ணாநோன்பு போராட்டமும் தமிழர் தாயகம் தழுவிய கையெழுத்துப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பால் அழைப்பு விடுக்கப்பட்ட குறித்த போராட்டம் ழ்ப்பாணம் நல்லை ஆதீன முன்றலில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமானது. அடையாள உண்ணாவிரத போராட்டமானது மாலை 5 மணிவரை இடம்பெறவுள்ளது.
தமிழ் மக்கள் சார்ந்த தேசிய சக்திகள், சமய சமூக தன்னார்வ அமைப்புக்கள் என பல தரப்புக்கள் இணைந்து முன்னெடுக்கும் போராட்டத்தின் பிரதான கோரிக்கைகள்
1.அழிக்கப்பட்ட வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிவலிங்கம், தெய்வ சிலைகள் உடனடியாக மீள் நிர்மாணம் செய்யப்பட வேண்டும். நீதியான விசாரணை துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
2.குருந்தூர் மலை, கன்னியா வெந்நீரூற்று ஆதி சிவன் வழிபாட்டு உரிமைகள் உடனடியாக மீள வழங்கப்படுவதுடன் புதிய பௌத்த கட்டுமானம் மற்றும் பௌத்த தொல்லியல் புதிய வர்த்தமானி இரத்து நடைமுறையில் செயற்படுத்தப்பட வேண்டும்.
3.இன மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தமிழர் தாயகத்தின் தொன்மங்களை, மரபுரிமைகளை மாற்றியமைக்கும் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
4.மட்டு. மயிலத்தனை மடு மேய்ச்சல் தரையில் பெரும்பான்மை இன மக்களின் ஆக்கிரமிப்புக்கள் சகலதும் நிறுத்தப்பட்டு தமிழ் பண்ணையாளர்களின் மரபுரிமையான மேய்ச்சலுக்கான வாழ்வுரிமை உறுதிப்படுத்த வேண்டும்.
5.போருக்கு பிந்திய இன மதப்பரம்பலை மாற்றி அமைக்கும் திட்டமிட்ட பாரிய குடியேற்றம் உள்ளிட்ட செயற்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
ஆகிய பிரதான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.