திருப்பதியில் இயற்கை விவசாய பொருட்கள் மூலம் லட்டு தயாரிக்க முடிவு!!
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் ஆலோசனை கூட்டம் திருப்பதி மலையில் உள்ள அன்னமய்யா பவன் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டம் முடிந்தப்பின் அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கோடை விடுமுறை காலத்தில் சாதாரண பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து இருக்கிறோம். இயற்கை விவசாயம் மூலம் விளைவிக்கப்படும் பொருட்களை தொடர்ந்து கொள்முதல் செய்யவும், அவற்றின் விலை அதிகமாக உள்ளதால் விவசாயிகள் மற்றும் ஆந்திர மாநில விளைபொருள் விற்பனை துறை அதிகாரிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி சரியான விலையில் கொள்முதல் செய்ய அறங்காவலர் குழு உறுப்பினர்கள் 2 பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இயற்கை விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை பயன்படுத்தி லட்டு பிரசாதம் தயார் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதியில் புதிதாக குளிர்பதன கிடங்கு அமைக்க ரூ.14 கோடியும், சாதாரண கிடங்கு அமைக்க 18 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஏழுமலையான் கோவிலில் மே மாதம் 3-ந்தேதி துவங்கி 16-ந்தேதி வரை திருப்பதி மலையில் நடைபெறுவது போல் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. திருப்பதியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீநிவாச சேது மேம்பால கட்டுமான பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.