ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம்: சித்தராமையா!!
பெலகாவியில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவராக இருந்த ஈசுவரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். பா.ஜனதாவின் கொள்கைகளை தீவிரமாக கடைப்பிடித்து வந்த அவரது நிலைமை தற்போது என்ன ஆகி இருக்கிறது. ஈசுவரப்பாவின் இந்த நிலைமையை பார்த்தாலே பா.ஜனதாவில் மூத்த தலைவர்களை சரியாக நடத்துவதில்லை என்பது தெளிவாகி இருக்கிறது. பா.ஜனதாவின் முதல் மற்றும் 2-வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியான பின்பு நிறைய தலைவர்கள் சீட் கிடைக்காமல் அதிருப்தி அடைந்துள்ளனர். சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டருடன் நான் எந்த பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை.
அவர் காங்கிரசுக்கு வந்தால் வரவேற்போம். லட்சுமண் சவதி காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பதால், பெலகாவியில் எங்களுக்கு பெரிய சக்தி கிடைத்துள்ளது. பெலகாவியில் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. லட்சுமண் சவதியை காங்கிரஸ் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. அந்த கட்சிக்குள் மோதல் உருவாகி உள்ளது. காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். இவ்வாறு சித்தராமையா கூறினார்.