;
Athirady Tamil News

துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து- தமிழகத்தை சேர்ந்த 2 பேர் உள்பட 16 பேர் பலி!!

0

துபாயின் அல்ராஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அக்கட்டிடத்தின் 4-வது மாடியில் தீப்பிடித்தது. பின்னர் தீ மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி கொளுந்துவிட்டு எரிந்தது. இதனால் கட்டிடத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. கட்டிடத்துக்குள் தீ மற்றும் புகை சூழ்ந்ததால் மக்கள் வெளியேறாமல் சிக்கினர். தீயணைப்பு படையினர் மற்றும் மீட்டு குழுவினர் அங்கு விரைந்து வந்து கட்டிடத்தில் இருந்தவர்களை வெளியேறினர்.

கொளுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க வீரர்கள் கடுமையாக போராடினர். சுமார் 2 மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் 16 பேர் பலியானார்கள். இதில் 4 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்தது. தமிழகத்தை சேர்ந்த 2 ஆண்கள், கேரளாவை சேர்ந்த தம்பதி ஆகியோர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக துபாயில் உள்ள இந்திய சமூக சேவகர் நசீர் வடனப் பள்ளி என்பவர் கூறும் போது, `கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் தமிழகத்தை சேர்ந்த 2 ஆண்கள், கேரளாவை சேர்ந்த தம்பதி அடையாளம் காணப்பட்டுள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த 3 பேரும், நைஜீரிய பெண் ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.

துபாயில் உள்ள இந்திய துணை தூதரகம், அதிகாரிகள், பலியானவர்களின் நண்பர்கள், உறவினர்களை தொடர்புகொண்டு வருகிறோம்’ என்றார். பலியானவர்களில் தமிழகத்தை சேர்ந்த அப்துல் காதர், சாலியாகுண்ட், கேரள மலப்புரம் வெங்கரையை சேர்ந்த ரிஜேஷ், அவரது மனைவி ஜிஷி என்பது அடையாளம் காணப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரிஜேஷ் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் ஊழியராகவும் ஜிஷி பள்ளி ஆசிரியையாகவும் பணியாற்றி வந்தனர். தீவிபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அக்கட்டிடத்தில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று துபாய் குடிமை தற்காப்பு செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்படு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.