சரிவை நோக்கும் அமெரிக்கா..! வரலாற்றில் கறைபடிந்த அத்தியாயம் !!
அமெரிக்காவின் படைத்துறையை மாத்திரமல்ல, அமெரிக்காவின் ஒட்டுமொத்த இராஜதந்திர செயற்பாடுகளையும் ஆட்டம்காண செய்துவிட்டுள்ள ஒரு விடயம் தான் Pentagon Leaks என்ற அமெரிக்காவின் இராணுவ ரகசிய கசிவு விவகாரம்.
குறிப்பாக உக்ரைன் – ரஷ்ய யுத்தம் தொடர்பான ஏராளமான ரகசியங்களை அமெரிக்க வான் பாதுகாப்பு படைப் பிரிவின் புலனாய்வு பிரிவில் பணியாற்றும் 21 வயதான வீரர் ஒருவர் சேகரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்த செயல், உக்ரைன் போர்க்களத்தில் மாத்திரமல்ல, சர்வதேச இராஜதந்திர வட்டங்களிலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆவணக்கசிவு பல்வேறு நாடுகளுக்கு பலவிதமான தர்ம சங்கடங்கள், சிக்கல்கள் என்பவற்றை தோற்றுவித்திருந்தாலும் அமெரிக்காவின் வரலாற்றில் இந்தச் சம்பவம் கறைபடிந்த ஒரு அத்தியாயம் என்பதில் சந்தேகமில்லை.
அமெரிக்கா போன்ற ஒரு இராணுவ வல்லரசின் ரகசிய உளவுத் தகவல்கள் இத்தனை பாதுகாப்பற்ற ஒரு சூழலில் வைக்கப்பட்டிருக்கின்றன என்கின்ற விடயம் அமெரிக்காவின் ஒட்டுமொத்த இராணுவ வல்லாண்மையின் மீது எழுப்பப்பட்டுள்ள ஒரு கேள்விக்குறி தான்.
அது மட்டுமல்ல பல்வேறு நாடுகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு பல்வேறு ஒப்பந்தங்களை செய்துகொண்டு உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கின்ற அமெரிக்கா, தனது நட்பு நாடுகளின் ரகசியங்களை பாதுகாப்பற்ற சூழலில் தான் வைத்திருக்கின்றது என்கின்ற செய்தி அமெரிக்கா தொடர்பான மிகப்பெரிய நம்பகமற்ற ஒரு சூழலை நட்பு நாடுகளுக்கு இடையே ஏற்படுத்தி விடும்.
அமெரிக்காவுடன் ரகசியமான விடயங்களை பகிர்ந்து கொள்வதற்கும் – ரகசியமான காரியங்களில் ஈடுபடுவதற்கும் எதிர்காலத்தில் மிகப்பெரிய தயக்கங்கள் மற்றைய நாடுகளுக்கு ஏற்படவும் கூடும்.
ஆக அமெரிக்காவைப் பொறுத்தவரையில் இந்த ஆவணக் கசிவு என்பது மிகப் பெரிய பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை.