;
Athirady Tamil News

ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு அண்மையாக கிருஸ்தவ சபை!! (PHOTOS)

0

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு அண்மையாக கிருஸ்தவ சபை ஒன்றினால் அமைக்கப்படும் கட்டடம் தொடர்பில் பல தரப்பட்டவர்களினால் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்பாக மேற்படி கட்டடம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்ட போதே அதனை அமைப்பதற்கான அனுமதியை இரத்துச் செய்யுமாறு செல்வச்சந்நிதி ஆலய நிர்வாகம் கோப்பாய் பிரதேச செயலாளரிடம் எழுத்துமூலம் கோரியிருந்தது.

அத்துடன், வலி.கிழக்கு பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்திலும் செல்வச்சந்நிதி ஆலயத்துக்கு அண்மையாக அனுமதி பெற்றுக்கொள்ளாது மதத்தைப் பரப்பும் நோக்கோடு கட்டடம் ஒன்று அமைவதாகவும் அதுதொடர்பில் சபை முறையான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் என்றும் பிரதேச சபை உறுப்பினர் இ.ஐங்கரன் கேட்டிருந்தார். “சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலான இந்தச் செயற்பாடு தடுக்கப்படவேண்டும் எனவும் கட்டட அனுமதிக்கு விண்ணப்பம் கோரப்பட்டதா? என்பதன் ஊடாக அதனை அணுகுவது சிறந்தது எனவும் வலி.கிழக்கு பிரதேச சபையின் அப்போதைய தவிசாளர் நிரோஷ் சபைக்கு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த கிருஸ்தவ சபையினால் கட்டடம் அமைக்கும் பணி நிறைவு பெற்று வருகின்றது.

அந்தப் பிரதேசத்தில் வாழும் இந்துக்களும் கிருஸ்தவர்களும் குழப்பமின்றி வாழ்வதற்கு அந்த இடத்தில் கட்டடத்தை அமைப்பதைத் தடுக்குமாறே செல்வச்சந்நிதி ஆலய நிர்வாகம் கோப்பாய் பிரதேச செயலாளரிடம் கேட்டிருந்தது.

எந்தவொரு தரப்பினரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று செல்வச்சந்நிதி நிர்வாகம் தனது விசனத்தை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, கிருஸ்தவ சபை கட்டடம் அமைப்பதற்கு வலி.கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எனினும் அதுதொடர்பான உத்தியோகபூர்வ தகவலைப் பெற முடியவில்லை.

அண்மைய நாள்களாக மதமாற்ற அமைப்புகள் தொடர்பில் பல்வேறு குழப்பமான சம்பவங்கள் இடம்பெற்று வரும் நிலையில் சம்பந்தப்பட்ட தரப்புகள் இந்த விடயத்தில் உரிய கரிசனை கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.