அதிகாரத்துக்கான யுத்தம்: தூப்பாக்கிச் சத்தங்களால் மக்கள் பீதி – சூடான் நாட்டில் நடப்பது என்ன?
அதிகார வேட்கைதான் எல்லா யுத்தங்களின் அடிப்படையாக இருந்திருக்கிறது. இன்றளவும் அப்படித்தான். கிழக்கு ஆப்பிரிக்காவின் ஒரு குட்டி நாடான சூடானில் அதிகாரத்தைக் கைப்பற்றுவது யார் என்பதற்காக ஒரு நீண்ட யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. அது அவ்வப்போது கலவரமாக வெடிப்பதும் பின்னர் கனன்று கொண்டிருப்பதாகவும் இருக்கிறது. சூடான் யுத்தம் இரு நாடுகளுக்கு இடையே அல்ல சொந்த மக்களுக்குள் நடக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடக்கிறது. ராணுவத்துக்கும், அதன் கிளையான துணை ராணுவத்திற்கும் இடையே நடக்கிறது. இத்தனையும் ஆட்சி அதிகாரத்திற்காக நடக்கிறது. தற்போது கலவர பூமியாக மாறியிருக்கிறது சூடான்.
விமான நிலையம், அதிபர் மாளிகை… – தற்போது சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக அதிருப்தி தெரிவித்து வந்த துணை ராணுவப் படையினர் அந்நாட்டின் தலைநகர் கர்த்தூமில் உள்ள விமான நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனால், அங்கு ராணுவத்துக்கும் துணை ராணுவப் படையினருக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. அது மட்டுமல்லாமல், அதிபர் மாளிகையையும் துணை ராணுவப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளனர். இதனால் அங்கு திரும்பும் பக்கமெல்லாம் துப்பாக்கிச் சத்தம் தான் கேட்கிறது. கலவரத்தால் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இருப்பினும், ‘நாங்கள் நாட்டைப் பாதுகாப்போம்’ என்று ராணுவம் கூறியுள்ளது. அதுதான் மக்களின் அச்சத்திற்கு மேலும் ஒரு காரணமும் கூட. அதிகாரத்திற்கான மோதலில் பலியாகப் போவதென்னவோ அப்பாவி பொதுமக்கள் தானே.
சூடான் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் செயல்படுகின்றன. அதுமட்டுமல்லாது ராணுவத்தின் ஒரு பிரிவான பலம் பொருந்திய துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப் (Rapid Support Forces) என்ற பிரிவும் ராணுவ ஆட்சிக்கு எதிராக இயங்கிவந்தது.
இந்நிலையில், சூடான் நாட்டின் கர்த்தூம் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக துணை ராணுவப் படை தெரிவித்துள்ளது. இதனையடுத்து சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நிலவி வருகிறது. நாடு முழுவதும் கலவரம் பரவத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் ராணுவம் நாட்டைப் பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.