இந்தியா அமெரிக்கா உறவு மேலும் வலுப்பெறும்: வௌ்ளை மாளிகை அதிகாரி தகவல்!!
இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு மேலும் வலுப்பெறும் என வௌ்ளை மாளிகை அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவின் பன்முகத்தன்மையை கொண்டாடும் விதமாக அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகம் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஏராளமான அமெரிக்கவாழ் இந்தியர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் வெள்ளை மாளிகையில் இயங்கி வரும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் இந்தோ பசிபிக் ஒருங்கிணைப்பாளர் கார்ட் கேம்ப்பல் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, “இந்தியாவை தவிர உலகின் வேறெந்த நாட்டுடனும் அமெரிக்கா வலுவான மக்கள் உறவை கொண்டிருக்கவில்லை. நம்மிடையேயான உறவு பல ஆண்டுகளாக கட்டி எழுப்பப்பட்டவை. இந்த உறவு வளர்ச்சி, பாதுகாப்பு உள்ளிட்டவைகளில் இணைந்து பணியாற்றுவது மட்டுமன்றி, இருநாடுகளின் மக்களிடையேயான ஆழமான நட்புறவு. உலக நாடுகள் தற்போது சந்தித்து வரும் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்தியா, அமெரிக்கா உறவு செழித்து வளர்வது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய அற்புதமான விஷயம். இந்த வௌிப்படையான நட்புறவு மேலும் வலுப்பெறும்” இவ்வாறு தெரிவித்தார்.