பன்முகத்தன்மையை கொண்டாடுவதையும் அங்கீகரிப்பதையும் இந்தியா விரும்புகிறது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு!!
இந்தியா தனது பன்முகத்தன்மையை கொண்டாடுவதையும், விரும்புகிறது என ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் ஒருவார சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய நிதியம்(ஐஎம்எஃப்) மற்றும் உலக வங்கியின் வசந்தகால கூட்டங்களில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் கடந்த வாரம் ஞாயிற்றுகிழமை வாஷிங்டன் புறப்பட்டு சென்றார்.
அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்துவின் இல்லத்தில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு தின கொண்டாட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்பு மேதை டாக்டர். அம்பேத்கர் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அம்பேத்கரின் திருவுருவ படத்துக்கு அஞ்சலி செலுத்திய பின் அங்கிருந்த அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே உரையாற்றினார். அப்போது, “எப்போதுமே கொண்டாட்டங்களை விரும்பும் நாடு இந்தியா. இந்தியா தனது பன்முகத்தன்மையை கொண்டாடுவதையும், அங்கீகரிப்பதையும் விரும்புகிறது.
ஏப்ரல் 14ம் தேதியில், தமிழ் புத்தாண்டை தமிழ் நாள்காட்டியின்படி சூரிய ஜாதகம் அல்லது சந்திர ஜாதகத்தின் அடிப்படையில் கொண்டாடுகிறோம். ஆனால், ஆங்கில நாள்காட்டியின்படி இது இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய டாக்டர். அம்பேத்கரின் பிறந்த தினம். டாக்டர். அம்பேத்கர், தனக்கு பாடம் கற்று தந்த ஆசிரியர்களை பெருமைப்படுத்தும் விதமாக தனித்து நிற்கிறார்” இவ்வாறு கூறினார்.