உடல் எடை அதிகரிப்பு: திருப்பரங்குன்றம் கோவில் யானை புத்துணர்வு முகாமுக்கு அனுப்பி வைப்பு!!
திருப்பரங்குன்றம் கோவில் யானை அவ்வை மரணம் அடைந்ததையொட்டி கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அசாம் மாநிலத்தில் இருந்து 7 வயது பெண் யானை வாங்கப்பட்டது. உபயதாரர் மூலம் வழங்கப்பட்ட இந்த யானைக்கு கோவில் நிர்வாகம் தெய்வானை என பெயர் சூட்டி பராமரித்து வருகிறது. யானை தெய்வானை தினமும் கோவில் பூஜைக்கு திருமஞ்சனம் செய்வதற்கு சரவணப் பொய்கையில் இருந்து புனித நீர் எடுத்து வந்து கோவிலில் சேர்ப்பது, திருவிழாக்களின்போது கொடி பட்டதை தலையில் சுமந்து திருப்பரங்குன்றம் நகரின் முக்கிய வீதிகளில் உலா வருவது, சுவாமி புறப்பாடின்போது சுவாமிக்கு முன்பு செல்வது உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. இது தவிர கோவில் நிர்வாகம் மலைக்குப் பின்பகுதியில் இயற்கையான முறையில் யானை குளிப்பதற்காக குளியல் தொட்டி மற்றும் அதற்கான சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது. இந்நிலையில் வழக்கமாக நடைபெறும் மருத்துவ பரிசோதனை கோவில் யானைக்கு நடைபெற்றது. அப்போது வழக்கத்திற்கு மாறாக அதன் உடல் எடை அதிகரித்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவக் குழுவினர் யானையின் உடல் எடையை குறைக்க பரிந்துரை செய்தனர். அதன் அடிப்படையில் இந்து அறநிலையத்துறை ஆணையர் அனுமதியுடன் வனத்துறையினர் ஒப்புதல் பெற்று கோவில் யானை தெய்வானை பொள்ளாச்சியை அடுத்த டாப்ஸ்லிப் பகுதியில் உள்ள யானைகள் புத்துணர்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கோவில் அலுவலர்கள் கூறுகையில், யானை தெய்வானை உடல் எடை அதிகரித்த காரணத்திற்காகவும், அதற்கு மேலும் பயிற்சி அளிப்பதற்காகவும் 10 மாத காலம் பொள்ளாச்சியை அடுத்த டாப்ஸ்லிப் பகுதிக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது என தெரிவித்தனர்.