சென்னையில் கொளுத்தும் வெயிலால் தவிக்கும் பொதுமக்கள்!!
சென்னையில் கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே கோடை வெயில் கொளுத்த தொடங்கி விட்டது. அதன்பிறகு வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்திலேயே தமிழகத்தில் வெப்பம் பல இடங்களில் 100 டிகிரியை தாண்டியது. ஏப்ரல் மாதம் தொடங்கிய பிறகு வெயிலின் உக்கிரம் மேலும் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்துகிறது. கடந்த 4 நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. சென்னையில் வெயில் கொளுத்துவதால் பொது மக்கள் தவித்து வருகிறார்கள். பகல் நேரத்தில் அனல்காற்று வீசுவதால் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இரவு நேரத்திலும் புழுக்கம் அதிகமாக இருப்பதால் தூங்க முடியாமல் தவிக்கிறார்கள். தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவுதால் சில இடங்களில் வெப்ப நிலை இயல்பை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி வரை அதிகமாக பதிவாகிறது. நேற்றும் தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. சென்னை மீனம்பாக்கத்தில் நேற்று 101.66 டிகிரி வெயில் கொளுத்தியது.
இதனால் பகல் நேரத்தில் வெளியில் சென்ற பொது மக்கள் வெயிலை சமாளிக்க முடியவில்லை. இளநீர், தர்பூசணி, நுங்கு மற்றும் குளிர்பானங்களை குடித்து தாகத்தை தணித்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் கோடை வெப்பத்தை தணிப்பதற்காக இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளத்தில் உற்சாக குளியல் போட்டனர். சென்னை மெரினா கடற்கரை மணல் பரப்பு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான மிகப்பெரிய நீச்சல் குளம் உள்ளது.இந்த நீச்சல் குளம் காலை 5.30 மணி முதல் மாலை 8.30 மணி வரை இயங்கி வருகிறது. கோடை காலத்தில் வெயிலில் இருந்து தப்பிப்பதற்காகவும் வார இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நீச்சல் குளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
கோடை வெயிலையொட்டி நீச்சல்குளம் தற்போது சீரமைக்கப்பட்டு உள்ளது. நீச்சல் குளத்தில் புதிய தண்ணீர் நிரப்பப்பட்டது. தற்போது பொதுமக்கள் மெரினா கடற்கரையில் உள்ள நீச்சல் குளத்திற்கு படையெடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் சென்னையில் தற்போது கோடை வெயில் கொளுத்து வதையொட்டி சிறுவர்கள், இளைஞர்கள் கூட்டம் மெரினா நீச்சல் குளத்தில் அலைமோதி வருகிறது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மெரினா நீச்சல்குளம் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டு உள்ளது.
இதையொட்டி சிறுவர்கள், இளைஞர்கள் கூட்டம் பெருமளவில் வரத்தொடங்கி விட்டது. தற்போது கோடை வெயில் கொளுத்துவதையொட்டி வெப்பத்தில் இருந்து தப்பிப்பதற்காக இளைஞர்கள், பொது மக்கள் நீச்சல் குளத்துக்கு தினமும் வருகிறார்கள். உற்சாக குளியல் போடுகிறார்கள். வருகிற ‘மே’ மாதம் வரை கூட்டம் அதிகம் இருக்கும். இளைஞர்கள், பொதுமக்கள் இன்னும் அதிகளவு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.