பாகிஸ்தானில் மத நிந்தனை குற்றச்சாட்டில் சீன நாட்டவர் கைது!!
பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்திற்கு எதிராகவோ, நபிகள் நாயகத்திற்கு எதிராகவோ பேசுவோர் மீது கடும் சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அவ்வகையில், மத நிந்தனை செய்ததாக சீன நாட்டவரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கைபர் பாக்துன்க்வா மாகாணம் அப்பர் கோகிஸ்தான் மாவட்டத்தில் உள்ள தாசு நீர்மின் நிலையத்தில் சீன நாட்டைச் சேர்ந்த டியான் என்பவர் மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். அவர் கடவுளை அவமதித்ததாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். வெள்ளிக்கிழமை அன்று தொழிலாளர்கள் வாராந்திர தொழுகைக்கு சென்றபோது அவர் அவதூறான கருத்துக்களைக் கூறியதாக கூறப்படுகிறது. சரியாக வேலை நடக்கவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தொழிலாளர்களும் அப்பகுதி மக்களும் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலாளர் டியானை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து டியான் கைது செய்யப்பட்டு, அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் மத நிந்தனை குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும் என குறிப்பிடத்தக்கது.