ரஷ்ய துணை பிரதமர் இந்தியா வருகை: இருதரப்பு முக்கிய ஆலோசனை!!
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் கடந்த ஓராண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், உலகம் முழுவதும் எரிபொருள், உணவு பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் தலை தூக்கி உள்ளன. இந்நிலையில், ரஷ்யாவின் துணை பிரதமர் மற்றும் தொழில்துறை மற்றும் வர்த்தக அமைச்சரான டெனிஸ் மான்டுரோவ் இந்தியாவுக்கு இன்று வருகை தந்துள்ளார். இந்தியாவில் 2 நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர், முதல் நாளான இன்று ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் ராஜாங்கபூர்வ ஆணைய கூட்டத்திற்கு (ஐ.ஜி.சி.) ரஷ்யா சார்பில் தலைமையேற்கிறார்.
அவர் இந்த கூட்டத்தில் வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில் நுட்பம் மற்றும் கலாசார ஒத்துழைப்பு பற்றி ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். இரு நாடுகளின் வர்த்தக பிரதிநிதிகளையும் அவர் சந்தித்து பேச இருக்கிறார். தொடர்ந்து நாளை நடைபெற உள்ள இரு நாடுகளின் ராஜாங்க அளவிலான ஆணைய கூட்டத்தில் 24வது ஐஜிசி கூட்டம் பற்றி இறுதி முடிவு செய்யப்பட உள்ளதாக வெளியுறவு வட்டாரங்கள் தெரிவித்தன.