சொகுசு வாழ்க்கைக்காக கஞ்சா வியாபாரிகளாக மாறிய கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது!!
கேரளா மாநிலத்தின் அருகே புதுவையின் மாகி பிராந்தியம் உள்ளது. இங்கு கஞ்சா கடத்தலை கட்டுப்படுத்த போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். பந்தக்கல் சாலை வழியாக வந்த காரை சோதனையிட்டனர். காரில் 580 கிராம் கஞ்சா சிறிய பொட்டலங்களாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. மாகி போலீஸ் சூப்பிரண்டு ராஜசங்கர்வல்லட், இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் காரில் இருந்தது கல்லூரி மாணவர்களான பந்தக்கல் பிரியதர்ஷினி, முகமது சையத்பரூக், முகமது பியாஸ், தளச்சேரி பகுதியை சேர்ந்த அலோக், பிளம்பர் வேலை செய்யும் தளச்சேரி ஷரன் என்பது தெரியவந்தது. 4 பேரும் அடிக்கடி ஆந்திரா உட்பட பகுதிகளுக்கு சுற்றுலா சென்று அங்கு மலை பகுதியில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் கஞ்சாவை வாங்கி வந்து, மாகியில் சிறிய பொட்டலங்களாக மாற்றி விற்பனை செய்துள்ளனர். இதில் கிடைத்த பணத்தில் கார், செல்போன், புதுப்புது உடைகள் என சொகுசாக வாழ்ந்தது தெரியவந்தது.
மாணவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து கார், 2 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் 4 பேரும் மாகி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். சொகுசு வாழ்க்கைக்காக மாணவர்கள் கஞ்சா வியாபாரிகளாக மாறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.