டைட்டானிக் கப்பல் வடிவத்தில் வீடு கட்டிய தொழிலாளி!!
மேற்கு வங்கத்தில் உள்ள வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஹெலன்சா பகுதியை சேர்ந்தவர் மின்டோரா. இவர் கடந்த 25 வருடங்களுக்கு முன்பு குடும்பத்துடன் சிலிகுரியில் உள்ள பசிடவா என்ற பகுதிக்கு குடிபெயர்ந்தார். அங்கு விவசாய தொழில் செய்து வந்து, நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையை நடத்தி வருகிறார். அவருக்கு டைட்டானிக் கப்பல் வடிவத்தில் ஒரு கனவு இல்லம் கட்ட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. இதற்காக பல்வேறு என்ஜினீயர்களிடம் அறிவுரை கேட்டபோதும் அவர்கள் அதுகுறித்து சரியாக பதில் அளிக்கவில்லை. இதனால் தன்னுடைய சுய முயற்சியால் அவரே கப்பல் வடிவத்தில் ஒரு வீட்டை கட்டினார். ஆரம்பத்தில் பணம் பற்றாக்குறை ஏற்பட்டு வீட்டு வேலை முடங்கி உள்ளது.
பின்னர் அவர் நேபாளத்துக்கு சென்று 3 வருடங்கள் கட்டுமான வேலை செய்து கிடைத்த அனுபவம் மூலமும், பணம் மூலமும் சொந்த ஊர் திரும்பிய பின்னர் கப்பல் வடிவத்தில் தனது கனவு இல்லத்தை மீண்டும் கட்ட தொடங்கினார். 39 அடி நீளமும், 13 அடி அகலமும், 30 அடி உயரத்தில் தனது கப்பல் வடிவ வீட்டை கட்டி முடித்தார். இதற்கு ரூ.15 லட்சம் செலவாகி உள்ளது. இதனை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வமாக பார்த்து செல்கின்றனர். மேலும் இந்த வீடு குறித்த வீடியோ வைரலானது. இதனால் அந்த பகுதி ஒரு சுற்றுலா தலம் போல மாறி உள்ளது.