கேரளாவின் கோட்டயத்தில் 300 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கும் மன்னர் காலத்து கிணறு!!
கேரளாவின் கோட்டயம் மாநகராட்சிக்கு உட்பட்ட தெக்கூர் சமஸ்தான பகுதியில் கமலநீராழி என்ற பழங்கால கிணறு உள்ளது. 500 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவை ஆண்ட மன்னரால் இந்த கிணறு வெட்டப்பட்டது. அப்போது அந்த பகுதி மக்கள் அனைவரும் இந்த கிணற்றில் இருந்துதான் குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். மன்னராட்சி மறைந்து மக்களாட்சி வந்த பின்னரும் இந்த கிணறு மக்களின் தாகம் போக்கி வருகிறது. அதாவது கோட்டயம் தெக்கூர் சமஸ்தான பகுதியில் இப்போது 300 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.
இங்குள்ள பெரும்பாலான வீடுகளுக்கு மாநகராட்சியின் குடிநீர் இணைப்பு இல்லை. ஆனால் அவர்கள் அனைவருக்கும் தினமும் தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் கிடைத்து வருகிறது. இந்த கிணற்றை கோட்டயம் மாநகராட்சி நிர்வகித்து வருகிறது. இந்த கிணற்றில் இருந்து 300 குடும்பங்களின் வீடுகளுக்கும் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. கிணற்றை பராமரிக்க இப்பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார். தினமும் காலை 6 மணிக்கு அவர் கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் திறந்து விடுவார்.
மதியம் வரை அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் தாராளமாக கிடைக்கும். அதன்பின்பு மறுநாள் தண்ணீர் வழக்கம் போல தண்ணீர் விடப்படும். இக்கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதால் இங்குள்ள மக்கள் யாரும் மாநகராட்சிக்கு குடிநீர் கட்டணம் செலுத்துவதில்லை. 500 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கிணறு இப்போதும் கோட்டயம் பகுதி மக்களின் தாகம் தணித்து வருவது ஆச்சரியமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறினர்.