அமெரிக்காவில் சீக்கியர்கள் 17 பேர் துப்பாக்கிகளுடன் கைது !!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள குருத்வாராவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தது. கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 27-ந்தேதி ஸ்டாக்டனில் உள்ள சீக்கிய கோவிலிலும், கடந்த மார்ச் 23-ந்தேதி சாக்ராமென்டோவில் உள்ள சீக்கிய கோவிலிலும் துப்பாக்கி சூடு நடந்தது. இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வடக்கு கலிபோர்னியாவில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் துப்பாக்கிகளுடன் 17 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏ.கே.47 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குருத்வாராவில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு உள்ளது என்றும் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலும் உள்ளூர் சீக்கிய சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, கைது செய்யப்பட்டவர்களில் 2 பேர் இந்தியாவில் பல கொலைகளில் தேடப்படும் மாபியா கும்பலை சேர்ந்தவர்கள். கைது செய்யப்பட்டவர்கள், சட்டர், சாக்ரமென்டோ, சான்ஜோவாகின், சோலானோ யோலோ ஆகிய இடங்களில் கொலை முயற்சிகள் உள்பட பல வன்முறை குற்றங்கள் மற்றும் துப்பாக்கி சூடு சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.