“உக்ரைன் போரை நாங்கள் தூண்டி விடுகிறோமா?” – பிரேசில் அதிபர் கருத்தால் அமெரிக்கா கொந்தளிப்பு!!
ரஷ்யா – உக்ரைன் போரை அமெரிக்கா தூண்டி விடுவதாக பிரேசில் அதிபர் லூலா கூறியதற்கு அமெரிக்கா கடும் விமர்சனத்தை அவர் மீது வைத்துள்ளது.
பிரேசில் அதிபர் லூலா சில நாட்களுக்கு முன்னர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். இப்பயணத்தின்போது உக்ரைன் – ரஷ்யா போரை குறித்தும் லூலா பேசி இருந்தார். “அமெரிக்கா போரை தூண்டி விடுவதை நிறுத்திவிட்டு, அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தி இருந்தார். லூலாவின் பேச்சை அமெரிக்கா கடுமையாக விமர்சித்தது.
இந்த நிலையில், பிரேசில் அதிபர் லுலாவை விமர்சித்து அமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “லூலாவின் கருத்துகள் தவறானவை. அமெரிக்காவும் ஐரோப்பாவும் சமாதானத்தில் ஆர்வம் காட்டவில்லை என்று தவறான கருத்துகளை லூலா கூறுகிறார். சீனா மற்றும் ரஷ்யாவின் பிரச்சாரத்தை கிளி பிள்ளைபோல் பிரேசில் அதிபர் லுலா சொல்கிறார்” என்று தெரிவித்தார்.
ரஷ்ய வெளியுறவுத்துறை லார்வோ அரசியல் பயணமாக திங்கட்கிழமை பிரேசிலுக்கு வந்துள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய லார்வோ, “பிரேசில் ரஷ்யா – உக்ரைன் போரின் நிலைமையை நன்கு உணர்ந்துள்ளது. மேலும், பிரச்சினையை தீர்க்க தங்களால் முயன்ற பங்களிப்பை அளிப்பதாகவும் பிரேசில் கூறியிருப்பதற்கு நன்றியை தெரிவித்துத் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் போர்: நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்தது. இப்போரில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ அமைப்பும், அமெரிக்காவும் ஆயுதங்கள் வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.