நேபாள சிகரத்தில் மாயமான இந்திய மலையேற்ற வீராங்கனை உயிருடன் கண்டுபிடிப்பு !!
இமாசலபிரதேச மாநிலத்தை சேர்ந்த மலையேற்ற வீராங்கனை பல்ஜீத் கவுர். 27 வயதான இவர் உலகின் உயரமான சிகரங்களில் ஏறி சாதனை படைத்தவர் ஆவார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நேபாள நாட்டின் வடமத்திய பகுதியில் இமயமலை தொடரில் அமைந்துள்ள அன்னப்பூர்னா சிகரத்தில் தனி ஆளாக ஏறினார்.
அதைத்தொடர்ந்து, 8,091 மீட்டர் உயரம் கொண்ட அந்த மலையில் இருந்து அவர் இறங்க தொடங்கினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அன்னப்பூர்னா மலையில் உள்ள 4-வது முகாமுக்கு அருகே வந்துகொண்டிருந்தபோது பல்ஜீத் கவுர் திடீரென மாயமானார். இதை தொடர்ந்து ஹெலிகாப்டர்கள் மூலம் அவரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இந்த நிலையில் நேற்று அதிகாலை பல்ஜீத் கவுர் ‘உடனடி உதவி’ கேட்டு ரேடியோ சிக்னலை அனுப்பினார்.
இதன் மூலம் அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து ஹெலிகாப்டரில் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு குழு பல்ஜீத் கவுர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தது. இதனையடுத்து, அவரை பத்திரமாக மீட்பதற்கான பணிகளை மீட்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.