‘ட்விட்டரை வாங்கியது தவறான முடிவு’ – எலான் மஸ்க் கருத்து!!
அமெரிக்க செய்தி நிறுவனமான ‘ஃபாக்ஸ் நியூஸ்’ தொகுப்பாளர் டக்கர் கார்ல்ஸனுக்கு எலான் மஸ்க் சமீபத்தில் பேட்டியளித்தார்.
அப்போது “ட்விட்டரை விலைக்கு வாங்கியது பலன் மிக்கதாக உள்ளதா” என்று கார்ல்ஸன் கேள்வி எழுப்பினார். அதற்கு எலான் மஸ்க் “இல்லை. அது நிர்வாக ரீதியாக தவறான முடிவு. ட்விட்டரின் விளம்பர வருவாய் குறைந்து வந்த சமயத்தில் நான் அதை பெரும் தொகை கொடுத்து வாங்கினேன். சமீபத்தில் ட்விட்டரின் மொத்த மதிப்பை மறுமதிப்பீடு செய்தோம். அதன் மதிப்பு 20 பில்லியன் டாலராக (ரூ.16.40 லட்சம் கோடி) உள்ளது. இது நான் அதை வாங்கியதை விடவும் பாதிதான். அதாவது ட்விட்டரின் உண்மையான மதிப்பைவிட இருமடங்கு தொகை கொடுத்து அதை வாங்கியுள்ளேன். அதேசமயம் சில விஷயங்கள் விலை மதிப்பற்றவை” என்று தெரிவித்தார்.