மோசடி விண்ணப்பங்கள் எதிரொலி 5 ஆஸி. பல்கலை.யில் இந்திய மாணவர்களுக்கு தடை!!
ஆஸ்திரேலியாவில் உள்ள 5 பல்கலைக்கழகங்கள் இந்தியாவின் குறிப்பிட்ட சில மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் சேருவதற்கு தடை அல்லது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆண்டு தோறும் அதிக எண்ணிக்கையிலான இந்திய மாணவர்கள் சேர்க்கையில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் சுமார் 75ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த 5 பல்கலைக்கழகங்கள் தடை அல்லது கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
மாணவர் விசா விண்ணப்பங்களை முழுமையாக தாக்கல் செய்யாமை மற்றும் மோசடியான தகவல்கள் மற்றும் ஆவணங்களை வழங்குவது அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. மேலும் படிப்பதற்காக இல்லாமல் வேலை தேடும் மோசடி விண்ணப்பங்கள் அதிகரித்து வருவதாலும் பல்கலைக்கழகங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. விக்டோரியா பல்கலைக்கழகம், எடித் கோவன், வொல்லொங்காங், டோரன்ஸ் மற்றும் சதர்ன் கிராஸ் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக ஆஸ்திரேலிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.