ஒருபக்கம் நன்மை… மறுபக்கம் பெரும் தீமை.. செயற்கை நுண்ணறிவால் உலகிற்கே ஆபத்து: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை எச்சரிக்கை!!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உலகிற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த ‘கூகுள்’ நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘மனித குலத்தின் எதிர்காலத்தை கட்டமைக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் (மனிதன் சிந்தித்துச் செயல்படுவது போன்று, பல்வேறு கணினிச் செய்நிரல்களை உருவாக்கி, அவற்றைக் கணினியில் உள்ளீடு செய்து, அதன் வழியாக ஒரு இயந்திரத்தைச் சிந்தித்துச் செயல்பட வைக்கும் முறையினை செயற்கை நுண்ணறிவு என்கின்றனர்) ஆதிக்கம் ெசலுத்தும்.
நம்மை சுற்றியுள்ள உலகத்தை செயற்கை நுண்ணறிவு எவ்வாறு மாற்றுகிறது என்பதை சொல்லத் தேவையில்லை. இந்த துறை வேகமாக வளர்ந்து வருகிறது. அதேநேரம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தினால் மிகப்பெரிய தீங்கு ஏற்படும். செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் எதிர்மறையான பக்கங்களை நினைத்து பார்த்து கவலையடைகிறேன். இந்த தொழில்நுட்பம் நம்மை தூங்க வைக்கும். ஒவ்வொரு நிறுவனத்திலும் உள்ள ஒவ்வொரு தயாரிப்புகளையும் பாதிக்கும். எனவே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நிர்வகிக்க நாடுகளுக்கு இடையிலான புதிய விதிமுறைகளை கொண்டு வரவேண்டும்.