பா.ஜனதாவுடன் செல்வதாக கூறுவது வதந்தி: அஜித்பவார் பரபரப்பு பேட்டி!!
288 இடங்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலை அடுத்து பரபரப்பு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் கடந்த 7-ந் தேதி தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு திடீரென மாயமானார். கட்சி தலைமையுடன் அவர் தொடர்பை துண்டித்து விட்டதாகவும், அவர் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவுடன் கைகோர்க்க இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. 2019-ம் ஆண்டு உத்தவ் தாக்கரே காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சித்து வந்த வேளையில், அதிகாலை 3 மணிக்கு பா.ஜனதாவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும் கவர்னர் மாளிகையில் பதவி ஏற்றதும், பின்னர் அந்த ஆட்சி 80 மணி நேரம் மட்டுமே நீடித்ததும் நினைவுக்கூரத்தக்கது.
இப்படி பரபரப்பை ஏற்படுத்தியவர் தான் அஜித்பவார் என்பதால், தற்போது அவர் திடீரென மாயமானதும் அரசியலில் விறுவிறுப்பை எகிற செய்தது. ஆனால் மறுநாள் பொதுவெளியில் தோன்றிய அஜித்பவார் தனக்கு உடல்நிலை சரியில்லாததால் ஓய்வு எடுத்தேன் என்று கூறி சமாளித்தார். இந்த சம்பவத்துக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி பற்றிய கல்வி தகுதி சர்ச்சை தேவையற்றது என்றும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறியது பா.ஜனதாவுடனான நெருக்கம் தொடர்பான ஊகங்களுக்கு வலு சேர்த்தது. இந்த நிலையில் மும்பையில் நேற்று அஜித்பவார் தேசியவாத காங்கிரஸ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்ட இருந்ததாக தகவல் வெளியானது.
அஜித்பவார் எடுக்கும் எந்த முடிவையும் ஆதரிப்போம் என்று தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான அன்னா பன்சோடே, மாணிக்ராவ் கோகடே கூறியிருந்தனர். இதனால் மகாராஷ்டிரா அரசியல் களம் நேற்று விறுவிறுப்பானது. ஆனால் எதிர்பார்த்தபடி அஜித்பவார் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவில்லை. இது தொடர்பாக அஜித்பவாரை நிருபர்கள் பேட்டி கண்டனர். அவர் பதிலளித்து கூறியதாவது:- தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு இருப்பதாகவும், பா.ஜனதாவுடன் நான் கைகோர்ப்பதாகவும் வெளியான செய்திகளில் துளியும் உண்மையில்லை. நாங்கள் (கட்சி எம்.எல்.ஏ.க்கள்) அனைவரும் தேசியவாத காங்கிரசுடன் இருக்கிறோம். நான் உயிருள்ள வரை தேசியவாத காங்கிரசுக்காக உழைப்பேன். கட்சியில் எந்த பிளவும் இல்லை.
நாங்கள் குடும்பம் போல உழைத்து வருகிறோம். இது தொடரும். இவ்வாறு அவர் கூறினார். பா.ஜனதாவுடன் செல்வதற்காக தேசியவாத காங்கிரசில் உள்ள 53 எம்.எல்.ஏ.க்களில் 40 பேரிடம் கையெழுத்து வாங்கி வைத்து இருப்பதாக எழுப்பிய கேள்வியை அஜித்பவார் மறுத்தார். இதுபோன்ற ஆதரமற்ற தகவல்கள் கட்சி தொண்டர்களை குழப்புவதோடு, அவர்களது மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்றும் அஜித்பவார் கூறினார்.
இதேபோல அஜித்பவார் பா.ஜனதாவுக்கு செல்ல இருப்பதாக வெளியான தகவலை சரத்பவாரும் மறுத்தார். சரத்பவாரும், அஜித்பவாரும் விளக்கம் அளித்தபோதிலும், தேசியவாத காங்கிரசில் உள்கட்சி குழப்பம் நீடிப்பதை மறுக்க முடியாது என்று அரசியல் நோக்கர்கள் கூறி உள்ளனர். கடந்த காலங்களில் அதிரடி அரசியல் மாற்றங்களை கண்ட மகாராஷ்டிராவில் மீண்டும் அரசியல் மாற்றம் ஏற்படாது என்று சொல்ல முடியாது எனவும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி எனப்படும் உத்தவ் தாக்கரே கட்சி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பலமிக்கதாக மாறி இருப்பது பா.ஜனதாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணி எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றின் பின்னணியில் தான் அஜித்பவாரை அவரது ஆதரவாளர்களுடன் தன்பக்கம் இழுக்க பா.ஜனதா முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முடிவை அடுத்து ஏற்பட்ட மகாராஷ்டிரா அரசியல் நெருக்கடி இன்னும் தொடர்வது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.