கர்நாடகாவில் 4வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்: ஜெகதீஷ் ஷெட்டருக்கு வாய்ப்பு !!
கர்நாடகாவில் அடுத்த மாதம் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் நிறைவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி இன்று நான்காவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 7 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு ஹூப்ளி-தர்பாத் மத்திய தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் சமீபத்தில் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த எச்.டி.தம்மையா, சிக்கமகளூரு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்த தொகுதியில் பாஜக சார்பில் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி போட்டியிடுகிறார். இதேபோல் முதல்வர் பசவராஜ் பொம்மை போட்டியிடும் ஷிகான் தொகுதியில் அவரை எதிர்த்து முகமது யூசுப்பை நிறுத்தி உள்ளது.
தற்போதைய எம்எல்ஏ துர்கப்பா எஸ்.ஹூலகேரி, லிங்சுகர் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். ஹரிஹர் தொகுதி எம்எல்ஏ ராமப்பாவுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அந்த தொகுதியில் நந்தகவி ஸ்ரீனிவாஸ் போட்டியிடுகிறார். ஹூங்ளி தர்வாட் மேற்கு தொகுதியில் தீபக்சின்சோர், ஷரவணபெலகோலா தொகுதியில் கோபாலசுவாமி நிறுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் உளள் 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி இதுவரை மொத்தம் 216 வேட்பாளர்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.