’ஸ்ரீ ’தான் முக்கிய காரணம் !!
சிலோன் என்ற பெயரிலிருந்து ஸ்ரீ லங்கா என இந்நாட்டின் பெயரை மாற்றியது தான் இவ்வளவு காலமாக நாடு அழிவுக்கு உள்ளாவதற்கான காரணம் என விஞ்ஞான எழுத்தாளர் மற்றும் வான சாஸ்திரியான அநுர சி. பெரேரா தெரிவித்துள்ளார்.
“எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாராநாயக்க மற்றும் விஜய குமாரதுங்கவின் படுகொலையிலிருந்து நஷ்டமடைந்த பல நிறுவனங்கள் வரை ஸ்ரீ என்ற சொல் பாரிய அழிவைக் கொண்டுள்ளது. இலங்கையின் இறுதி அரசனின் பெயர் கூட ஸ்ரீ விக்ரமராஜசிங்க தான்“ என அவர் மேலும் விளக்கமளித்தார்.
அரசியல் தலைவர்களின் பெயர், அரசியல் கட்சிகளின் பெயர், அரச நிறுவனங்களின் பெயர் மற்றும் நாட்டின் பெயருக்கு முன் ஸ்ரீ என்ற சொல்லை பாவிப்பது தான் நாட்டை இந்த வங்குரோத்து நிலைக்குத் தள்ளியிருக்கிறது.
1956 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உருவாக்கத்திலிருந்து எமது நாட்டிற்கு துரதிஷ்டம் வந்தது.
அக்கட்சியை நிறுவிய பண்டாரநாயக்க, வாகன எண் பலகைகளில் ஸ்ரீ எனும் எழுத்தை சேர்த்தார். பின் நாட்டில் சிங்கள-தமிழ் இனக் கலவரம் தோன்றி பெரும் உயிர் உடைமைடகள் சேதம் ஏற்பட்டது. பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவுனர் படுகொலை செய்யப்பட்டார்“ என அவர் தெரிவித்தார்.